மானிய விலை பெட்ரோல் கடத்த முயன்ற தாய்லாந்து நாட்டவர் கைது

ஈப்போ:

மானிய விலையில் பெற்ற பெட்ரோலை கடத்துவதாக தனது வாகனத்தின் டேங்கை மாற்றியமைத்த சந்தேகத்தின் பேரில் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒருவர் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகத்தின் (KPDN ) பேராக் கிளை அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டார்.

பெங்கலான் உலுவில் உள்ள புக்கிட் பெராபிட் குடிநுழைவு, சுங்கம், தனிமைப்படுத்தல் மற்றும் பாதுகாப்பு (ICQS) வளாகத்தில் காலை 11.30 மணியளவில் 51 வயதுடைய அந்த நபர் தடுத்து வைக்கப்பட்டதாக பேராக் KPDN இயக்குனர் டத்தோ கமலுடின் இஸ்மாயில் தெரிவித்தார்.

ஒரு சாலைத் தடுப்பில் திடீரென மேற்கொண்ட ஆய்வு நடவடிக்கையில், மலேசியாவில் பதிவுசெய்யப்பட்ட தோயோத்தா கேம்ரி ரக காரின் அசல் டேங்குடன் இணைக்கப்பட்ட ஒரு கூடுதல் பெட்ரோல் சேமிப்பு தொட்டியை KPDN அமலாக்க அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

“மேலும் குறித்த கூடுதல் தொட்டியில் பெட்ரோல் என சந்தேகிக்கப்படும் 60 லிட்டர் திரவம் இருந்தது பரிசோதனையில் தெரியவந்தது,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

விநியோக கட்டுப்பாடு சட்டம் 1961 மற்றும் விநியோக கட்டுப்பாடு ஒழுங்குமுறை 1974 இன் கீழ் விசாரணைக்காக, சந்தேக நபர் நான்கு நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று கமல்லுடின் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here