ஆசியான் தலைமைத்துவத்தைப் பிலிப்பைன்ஸிடம் ஒப்படைத்தது மலேசியா

கோலாலம்பூர்:

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் தலைமையில், ஆசியான் அமைப்பு பல்வேறு அனைத்துலக சவால்களை மீறி முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருப்பதாக பிலிப்பைன்ஸ் அதிபர் ஃபெர்டினன்ட் மார்கோஸ் ஜூனியர் பாராட்டியுள்ளார்.

“அன்வார் திட்டமிட்ட பல பணிகளை வெற்றிகரமாக நிறைவேற்றி முடிந்துள்ளார். குறிப்பாக, திமோர்-லெஸ்டேவை ஆசியான் அமைப்பின் முழுமையான உறுப்பினராக இணைத்தது ஒரு முக்கியமான சாதனை,” என்று, மார்கோஸ் கூறினார்.

மேலும் ஆசியான் அமைப்பு, அனைத்து நாடுகளையும் இணைக்கும் ஒற்றுமை நோக்கத்துடன், புதிய பங்காளி நாடுகளுடன் உறவை வலுப்படுத்த முனைவதாகவும், வட்டார அமைதி, நிலைத்தன்மை மற்றும் கூட்டுறவு ஆகியவற்றை உறுதிப்படுத்த முயற்சிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

47வது ஆசியான் உச்சநிலை மாநாடு மற்றும் அதனுடன் தொடர்புடைய கூட்டங்கள் கடந்த செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 28) கோலாலம்பூரில் வெற்றிகரமாக முடிவடைந்தன.

இதில் மார்கோஸ் உட்பட பல ஆசியான் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

மலேசியா, 2025 ஆம் ஆண்டுக்கான ஆசியான் தலைமைப் பொறுப்பை நிறைவு செய்ததையடுத்து, அதிகாரப்பூர்வமாக தலைமைத்துவத்தை பிலிப்பைன்சுக்கு ஒப்படைத்தது.

இதன் அடிப்படையில், 2026 ஆம் ஆண்டில் பிலிப்பைன்ஸ் ஆசியான் அமைப்பின் தலைமை பொறுப்பை ஏற்கும்.

பிலிப்பைன்சும் மலேசியாவும் இடையிலான இருதரப்பு உறவு குறித்து மார்கோஸ் குறிப்பிட்டபோது, “இரு நாடுகளின் உறவு தொடர்ந்து மேம்பட்டுக் கொண்டிருக்கிறது. இதற்கு தலைவர்களுக்கிடையேயான நம்பிக்கையும் திறந்த உரையாடலும் முக்கிய காரணம்,” என்று தெரிவித்தார்.

ஆசியான் அமைப்பின் எதிர்கால வளர்ச்சிக்கு மலேசியா காட்டிய தூய்மையான வழிகாட்டுதல் மற்றும் ஒற்றுமை சார்ந்த பார்வை மற்ற உறுப்புநாடுகளுக்கும் ஊக்கமளிப்பதாக அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here