உலகத்தரம் வாய்ந்த  நவீன வீடமைப்பு திட்டங்களை ஆய்வு செய்ய மலேசியா தயார்

ஹாங்காங், நவ-4

மலேசியா உலகளாவிய சிறந்த நுட்பங்களை கற்றுக்கொள்ளும் திறன் கொண்டது என்றும், ஹாங்காங் உள்ளிட்ட பிற நாடுகளிலிருந்து புதுமை மிக்க வீடமைப்பு நவீனமயத்தை ஆராய தயாராக உள்ளது என்றும் வீடமைப்பு ஊராட்சிதுறை அமைச்சர், ங்கா கோர் மிங் தெரிவித்தார்.

ஹாங்காங் ஷாம் ஷூய் போ லெய்சரில் நேற்று வீடமைப்பு புத்தாக்க தொழில்நுட்ப மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் இவ்வாறு உரையாற்றினார். நான்கு நாட்களுக்கு (நவம்பர் 4-7) இந்த மாநாடு நடைபெறுகிறது.  மலேசியா தேசிய வீட்டு கட்டுமான நெறிமுறைகளை மேம்படுத்த அனைத்து புதுமை யோசனைகளையும் வரவேற்கிறது என்றும், அதன்மூலம் அனைத்து மலேசியர்களுக்கும் தரமான, விலை மலிவான வீடுகளை வழங்க முயற்சிக்கிறது என்றும் அவர் கூறினார்.

வீடமைப்பு திட்டங்களில் வானிலை மாற்றம், வளக் குறைவு, வீட்டு விலை சவால்கள் போன்ற விஷயங்கள் மலேசியாவுக்கு மட்டுமல்ல உலகளாவிய பிரச்சினைகளாகவும் விளங்குகின்றன என்றும் அவற்றைக் கையாள, ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கைகள் அவசியமெனவும் ஐநா வாழ்விட மன்றத்தின் தலைவருமான ங்கா கூறினார்.

நமது குறிக்கோளின் வீரியம், சக்திவாய்ந்த கூட்டமைப்பு, ஒத்துழைப்பு  ஆகியவற்றை இது உட்படுத்தியுள்ளது. நாங்கள் வெறும் உள்ளூர், மாநகர சந்தை என்பனவற்றை மட்டுமே பார்க்கவில்லை. ஹாங்காங் போன்ற உலக தரச் சந்தையுடன் இணைந்த சிறந்த பங்காளியாக இந்த கூட்டு நடவடிக்கைகளை காண்கிறோம் என்றும் அவர் விவரித்தார்.

முழுமையான ஆராய்ச்சி வளர்ச்சி, லிவிங் லேப்ஸ் கட்டுமான தொழில்நுட்ப மேம்பாடு, பசுமை நீர்வள குளிர்ச்சி தரவு ஆய்வு, எஸ்டிஜி 2030 முன்னேற்றம், பரிசோதனை திட்டங்கள் வாயிலான புதுமை தொழில்நுட்பமும் இதில் அடங்கும்.

 ஹாங்காங்கின் தொழில்நுட்ப சிறப்புகளை மலேசியாவின் வலுவான தொழிற்துறை உற்பத்தி திறனுடன் இணைப்பது, மட்டுமல்லாமல் கட்டுமான பொருட்கள், புதிய தொழில்நுட்பக்  கூறுகள் ஆகியவற்றிற்கு நிலைத்தன்மை வாய்ந்த  பிராந்திய சூழலை உருவாக்குவதும் இந்த நோக்கத்தின் அடிப்படை அம்சமாகும்.

இரு நாடுகளின் வீடமைப்பு அதிகாரிகளுக்கிடையில் பன்னாட்டுத் தரவுகளை பகிர்ந்து, கட்டிட செயல்திறனை கவனித்தல், குளிர்ச்சி உஷ்ணமண்டல பகுதிகளுக்கான நிலைத்தன்மை சான்றிதழ் இணைப்பு உருவாக்குதல் ஆகியவை முக்கிய ஒத்துழைப்புகளில் சிலவாகும்.

ஹாங்காங்கின் நகர புதுப்பிப்பு, நகர மறுசீரமைப்பு, நகர மேம்பாட்டின் சிறந்த நடைமுறைகளை பயன் படுத்தலும் இந்த ஒத்துழைப்புகளில் அடங்கும் என்று ங்கா கூறினார். வீடமைப்புத் துறைக்கான எதிர்காலம் என்பது எந்த ஒரு நாடாக இருப்பினும் தனியாக சமாளிக்க முடியாத பெரும் சவாலாகும். இதில் ஹாங்காங்கின் மதிநுட்பத்தையும் மலேசியாவின் அனுபவ ஆற்றலையும்  ஒருங்கிணைத்து ஹாங்காங்கின்  மூலதனத்தை நமது திறனுடன் இணைக்க விழைகிறது.

அவர் மேலும், மலேசியா முதன் முறையாக இந்த மாநாட்டில் பங்கேற்பது, மடானி அரசின் நிலைத்தவசதி, திறன் மிக்க, தொழில்நுட்ப முன்னேற்றமான வீட்டு சூழல்களை உருவாக்கும் உறுதிப்பாட்டை காட்டுகிறது என்றும் 2035 க்குள் அடுத்த 10 ஆண்டுகளில் 1 மில்லியன் மலிவான வீடுகளை வழங்கும் இலக்கை அடையும் நோக்கத்தை இது கொண்டிருக்கிறது என்று அவர் கூறினார்.

நமது குறிக்கோள் வெறும் வீடுகளை கட்டுவதல்ல,  பல தலைமுறைகளுக்கும் நிலைத்தவசதி, பாதுகாப்பு மகிழ்ச்சி மிக்க சமூகங்களை வீடமைப்பின் மூலம் உருவாக்குவதே என்று ங்கா தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here