RM5.53 மில்லியனுக்கும் மேற்பட்ட JPJ சம்மன்கள் நிலுவை; டிசம்பர் 30 வரை 50% தள்ளுபடியை பயன்படுத்திக் கொள்ளுங்கள் -போக்குவரத்து அமைச்சர்

கோலாலம்பூர்:

நாட்டில் RM5.53 மில்லியனுக்கும் மேற்பட்ட சாலை மற்றும் போக்குவரத்துத் துறை (JPJ) சம்மன்கள் இன்னும் நிலுவையில் உள்ளன என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

அமைச்சின் நவம்பர் கூட்டம் மற்றும் தீபாவளி கொண்டாட்டத்திற்குப் பிறகு பேசிய அவர், தள்ளுபடி திட்டம் இன்னும் நடைமுறையில் உள்ள நிலையில், சம்மன்களை செலுத்தாமல் இருப்பவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்கள் நிலுவை சம்மன்களை விரைவில் செலுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

“டிசம்பர் 30 வரை 50% தள்ளுபடி இன்னும் வழங்கப்படுகிறது. அதற்குள் சம்மன்களைத் கட்டி முடிப்பது சிறந்தது,” என்று அவர் கூறினார்.

கடந்த மாதம் அறிவித்தபடி, JPJ மற்றும் காவல்துறையால் வழங்கப்படும் போக்குவரத்து சம்மன்கள் அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் ஒரே தரப்படுத்தப்பட்ட அமைப்பின் கீழ் ஒருங்கிணைக்கப்படவுள்ளன. எனவே புதிய கொள்கையின் கீழ், “நீங்கள் எவ்வளவு சீக்கிரம் செலுத்துகிறீர்களோ, அவ்வளவு குறைவாக செலுத்துகிறீர்கள்” என்ற முறையில் அபராதம் கணக்கிடப்படும்.

அதன்படி:

  • 15 நாட்களுக்குள் செலுத்தினால் 50% தள்ளுபடி
  • 30 நாட்களுக்குள் 33% தள்ளுபடி
  • 60 நாட்களுக்குள் முழுத் தொகை கட்டணம்
  • 60 நாட்களுக்குப் பிறகு நீதிமன்ற நடவடிக்கை அல்லது கருப்புப் பட்டியலில் சேர்த்தல்

“நிலுவையில் உள்ள சம்மன்களைச் செலுத்தாதவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் அல்லது அவர்களின் வாகன பதிவு (LKM) கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படும். இதனால், MySikap அமைப்பில் சாலைவரி புதுப்பிக்க முடியாது,” என்று அமைச்சர் எச்சரித்தார்.

JPJ ஏன் காவல்துறையைப் போல 70% தள்ளுபடி வழங்கவில்லை என்று கேட்கப்பட்டபோது, “இந்த ஆண்டு தொடக்கம் முதல் JPJ 50% தள்ளுபடி விகிதத்தையே தக்க வைத்துள்ளது. அதனை மாற்றுவது முன்பே கட்டியவர்களுக்கு நியாயமல்ல,” என்று அந்தோணி லோக் தெளிவுபடுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here