கோத்தா கினபாலு:
நாளை (சனிக்கிழமை) நடைபெறவுள்ள சபா மாநிலத்தின் 17-ஆவது சட்டமன்றத் தேர்தலில், ஆளும் GRS (காபுஙான் ராக்க்யாத் சபா) கூட்டணி மீண்டும் ஆட்சியை அமைக்கும் வாய்ப்பு மிக அதிகம் என ஆய்வு மையமான Ilham Centre தனது புதிய ஆராய்ச்சியில் தெரிவித்துள்ளது.
சபா தேர்தலுக்கான பிரச்சாரங்கள் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 11.59 மணிக்கு முடிவடைகின்ற நிலையில், கடந்த சில நாட்களில் மேற்கொள்ளப்பட்ட இறுதி தரவு ஆய்வை வெளியிட்ட Ilham Centre, முதலமைச்சர் டத்தோ ஶ்ரீ ஹஜிஜி நோர் தலைமையிலான GRS கூட்டணி “வலுவான வெற்றியைப் பதிவு செய்யும் நிலை தெளிவாக உள்ளது” என்று கூறியுள்ளது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் GRS வெற்றி பெற்ற பல முக்கிய (ஸ்ட்ராங்க்) தொகுதிகளை, இந்தத் தேர்தலிலும் அந்தக் கூட்டணி மீண்டும் தக்கவைத்துக்கொள்ளும் வாய்ப்பு அதிகம் என்று ஆய்வு முடிவுகள் குறிப்பதாக Ilham Centre தெரிவித்துள்ளது.




















