கோலாலம்பூர்:
நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் ஏற்பட்ட சமீபத்திய வெள்ளத்தால்சேதமடைந்த பொது உள்கட்டமைப்புக்களை உடனடியாக சரிசெய்ய, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் RM500 மில்லியன் நிதியியை அறிவித்துள்ளார்.
எனவே அனைத்து மாநில மற்றும் மத்திய அரசாங்க துறைகள் சேத மதிப்பீடுகளை விரைந்து செய்து, உடனடியாக பழுதுபார்க்கும் பணிகளைத் தொடங்குமாறு பிரதமர் அன்வார் உத்தரவிட்டுள்ளார்.
“இதில் பள்ளிகள், மருத்துவமனைகள், அடிப்படை சுகாதார வசதிகள் மற்றும் சாலைகள் ஆகியவை அடங்கும்” என்று, நேற்று பிரதமர் 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மசோதாவின் இரண்டாவது வாசிப்புக்காக தாக்கல் செய்தபோது தெரிவித்தார்.
கடந்த அக்டோபர் 10-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட இந்த பட்ஜெட் மசோதா நேற்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
நிதியமைச்சராகவும் உள்ள அன்வர் மேலும் கூறுகையில், தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (நட்மா) அதன் தயார்நிலையை மேம்படுத்தி, உள்ளூர் அதிகாரிகள் மற்றும் மாநில அரசுகளுடன் இணைந்து பேரிடர் மேலாண்மையை உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
“இந்த ஆண்டு வெள்ளத்தால் 150க்கும் மேற்பட்ட தற்காலிக நிவாரண மையங்கள் (PPS) செயல்படுத்தப்பட்டு, 12,000க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்கப்பட்டுள்ளது.”
இந்நிலையில் நவம்பர் 30 அன்று காலை 8 மணி நிலவரப்படி, சிலாங்கூர், திரெங்கானு, கிளந்தான், பேராக், கெடா, பகாங் மற்றும் பெர்லிஸ் ஆகிய ஏழு மாநிலங்களில் பாதிப்பு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறைந்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.





















