கோலாலம்பூர்:
கடந்த புதன்கிழமை காலை தெலோக் ஆயிர் தாவரில் உள்ள தாமான் ரத்னா பகுதியில் நிகழ்ந்த தீ விபத்தில், ஒரு பெண்ணும் அவரது வளர்ப்பு மகளும் உயிரிழந்த சம்பவம் குறித்த இறுதி விசாரணையைத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (JBPM) முடித்து வருகிறது.
ஆய்வகச் சோதனை முடிவுகள் உட்பட விசாரணை அறிக்கை விரைவில் நிறைவடையும் என்றும், பின்னர் அது காவல்துறைக்குச் சமர்ப்பிக்கப்படும் என்றும் பினாங் JBPM இயக்குநர், முஹமட் ஷோகி ஹம்சா கூறினார்.
“தீ தடயவியல் அறிக்கை மற்றும் ஆய்வக முடிவுகள் உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களையும் மேலதிக நடவடிக்கைக்காகக் காவல்துறையிடம் ஒப்படைப்போம். இந்த நிலையில், குற்றவியல் கூறுகள் சம்பந்தப்பட்டுள்ளனவா என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியாது,” என்று அவர் கூறினார்.
குறித்த தீ சம்பவத்தில் 50 வயதுடைய ஹயானி யாக்கோப் மற்றும் அவரது ஐந்து வயது வளர்ப்பு மகள் ஆந்த்ரா. ஆகியோர் வீட்டிற்குள் சிக்கி உயிரிழந்தனர். அதேநேரம் உயிரிழந்த ஹயானியின் 20 வயதுடைய மகன் டேனியல் குயூம் என்பவர் பலத்த காயங்களுக்குள்ளாகி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
இந்நிலையில் தீ விபத்துக்கான காரணத்தைத் தீர்மானிக்க உதவும் வகையில், டிஎன்ஏ சோதனைகளின் முடிவுகள் மற்றும் கெப்பாலா பத்தாஸ் மருத்துவமனையில் (HKPB) நடத்தப்பட்ட உடற்கூறு பரிசோதனை (Autopsy) முடிவுகளுக்காகக் காத்திருப்பதாகப் பினாங் காவல்துறைத் தலைவர் டத்தோ அஜிஸீ இஸ்மாயில் தெரிவித்தார்.
தடயவியல் மற்றும் ஆய்வக அறிக்கைகளை ஆய்வு செய்வது உட்பட, தீயணைப்புத் துறையுடன் ஒருங்கிணைந்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.
இதற்கிடையில், டேனியல் குயூமின் தந்தை, கமாரோஸ்லான் முஹமட் (57), தனது மகனுக்குத் தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், தற்போது அவர் செபராங் ஜெயா மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) இருப்பதாகவும் தெரிவித்தார்.
“அவர் மயக்கம் தெளிந்தவுடன் தன் தாயைப் பற்றிக் கேட்டார். அமைதியாக இருக்கும்படியும் ஓய்வெடுக்கும்படியும் நாங்கள் அவரிடம் சொன்னோம். அவரது உடல்நிலை மேம்பட்டு வருகிறது. அவர் விரைவில் பூரண குணமடைவார் என்று நம்புகிறோம்,” என்று கமாரோஸ்லான் கூறினார்.





















