டிக்டோக்கில் மாமன்னர் உள்ளிட்ட பிற ஆட்சியாளர்களுக்கு எதிராக தேசத்துரோகக் கூறுகள், அவமதிப்புகளைக் கொண்டதாகக் கூறப்படும் ஒரு காணொளி பரவியது தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக நேற்று ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வுத் துறை இயக்குநர் எம். குமார் கூறுகையில், இந்த காணொளியை டிக்டோக் கணக்கின் உரிமையாளர் அல்லது இயக்குபவர் @muhammad.bin.abdu969 நேற்று பதிவேற்றியதாக நம்பப்படுகிறது. 41 வயதான அந்த நபருக்கு போதைப்பொருள் தொடர்பான குற்றம் உட்பட நான்கு வழக்குகளில் குற்றப் பதிவு இருப்பது சோதனைகளில் கண்டறியப்பட்டது.
இந்த வழக்கு தேசத்துரோகச் சட்டம் 1948 இன் பிரிவு 4(1), தண்டனைச் சட்டத்தின் பிரிவு 504, தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டம் 1998 இன் பிரிவு 233 ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப்படுகிறது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
தேசத்துரோக அறிக்கைகள், அவமதிப்புகள் அல்லது பொது ஒழுங்கு மற்றும் தேசிய பாதுகாப்பை சீர்குலைக்கும் எந்தவொரு வகையான ஆத்திரமூட்டலையும் பரப்ப சமூக ஊடக தளங்களை தவறாகப் பயன்படுத்தும் எந்தவொரு நபருடனும் காவல்துறை சமரசம் செய்யாது என்று குமார் கூறினார்.
சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் போது பொதுமக்கள் அதிக பொறுப்புடன் இருக்கவும், எப்போதும் சட்டத்தை மதிக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று அவர் கூறினார்.










