அமைதிச் சூழலில் புத்தாண்டுக் கொண்டாட்டம் 2026 மலேசிய வருகை ஆண்டு சுற்றுலாத்துறைக்கு புதிய அத்தியாயம் பிரதமர் பாராட்டு

கோலாலம்பூர்:
புதன்கிழமை நள்ளிரவு நடைபெற்ற புத்தாண்டு தினக் கொண்டாட்டம் தேசிய ஒருமைப்பாட்டையும் சுபிட்சத்தையும் வலுப்படுத்த உதவ முடியும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். அதுமட்டுமன்றி உலக அரங்கில் பரிவுமிக்க சுற்றுலாத் தலமாகவும் நிறைவான மதிக்கப்படும் சுற்றுலாத் தலமாகவும் மலேசியாவைப் பிரபலப்படுத்த இந்தக் கொண்டாட்டம் ஒரு புதிய அத்தியாயமாக மலர்ந்திருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.


முழுமையான அமைதிச்சூழலில் புத்தாண்டு தினக் கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது. 2026 மலேசியாவுக்கு வருகை புரியும் ஆண்டுக்கான பிரச்சாரத்திற்கும் இது பக்கபலமாக அமைந்திருக்கிறது என்றும் அவர் சொன்னார். மலேசிய மக்களின் ஒற்றுமை உணர்வு, பல்வேறு கலை கலாச்சாரத்தில் தனித்துவம் ஆகியவற்றையெல்லாம புத்தாண்டு தினக்கொண்டாட்டம் பிரதிபலிப்பதாக அமைந்திருந்தது.

உலகம் முழுவதிலுமிருந்து சுற்றுப்பயணிகளை வரவேற்பதில் மலேசிய மக்கள் ஒற்றுமை உணர்வுடன் இருந்து செயல்பட்டிருக்கின்றனர் என்றும் அவர் சொன்னார். புத்தாண்டு தினக் கொண்டாடத்தின் உச்சமாக பல்லூடகப் படைப்பும் இடம்பெற்றது. சுற்றுப்பயணிகள் அதிகம் திரளும் பகுதியில் வாணவேடிக்கைகள் நடைபெற்றன. இவை அனைத்தும் கட்டொழுங்குடனும் அமைதிச்சூழலிலும் நடைபெற்றதாக அவர் தமது முகநூல் பதிவில் குறிப்பிட்டார்.

2026 மலேசியாவுக்கு வருகை தரும் ஆண்டை முன்னிட்டு அதிகாரப்பூர்வமாக அதற்கான பிரச்சாரமும் தொடங்கிவிட்டது என்றும் அவர் சொன்னார். இதற்காக, கோலாலம்பூர் பெவிலியன் ஹோட்டலில் மிகப் பெரிய அளவில் புத்தாண்டு தின வரவேற்பு நடைபெற்று முடிந்திருக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

உலகம் முழுதும் உள்ள சுற்றுப் பயணிகளின் பிரதான தேர்வாக மலேசியா திகழ்வதற்கு ஏற்ப கிட்டத்தட்ட 43 மில்லியன் அனைத்துலகச் சுற்றுப்பயணிகள் வருகைக்கு மலேசியா இலக்கு நிர்ணயித்திருக்கிறது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

2026 மலேசிய வருகை ஆண்டு கவுண்ட்டவுன் புத்தாண்டுக்கு முதல் நாள் பிரமாண்டமாக நடைபெற்று அந்த பிரச்சாரத்திற்கு ஒரு முத்தாய்ப்பாக அமைந்தது. ஃபேம் ஈவெண்ட்ஸ், பெவிலியன் கோலாலம்பூர், சுற்றுலா, கலை, கலாச்சார அமைச்சு ஆகியவற்றின் வியூக ஒத்துழைப்பின் கீழ் 2026 மலேசிய வருகை ஆண்டிற்கான ஜன்னல் திரை திறப்பாக இருந்தது.

இதற்கான கவுண்ட்டவுன் இந்நிகழ்ச்சியின் முக்கியப் பிரமுகராக கலந்துகொண்ட பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் நடைபெற்றது. மலேசிய சுற்றுலா, கலை, கலாச்சாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ தியோங் கிங் சிங்கும் இதில் கலந்துகொண்டார்.

உலக நாட்டு மக்களை நம் நாட்டிற்கு வரவேற்பதற்கு 2026 மலேசிய வருகை ஆண்டு பிரச்சாரத்திற்கு ஒளியேற்றும் ஒரு திருவிழாவாக இன்றைய நிகழ்ச்சி நடைபெற்றது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

தன்னுடைய உன்னதமான கலாச்சாரம், ஆக்கத்திறன், கனிவான உபசரிப்பு, மலேசிய மக்களின் அன்பு, ஆகியவற்றுடன் உலக நாட்டு மக்களை இரு கரம் கொண்டு வரவேற்பதற்கு மலேசியா முழு தயார் நிலையில் உள்ளது என்று அவர் சொன்னார்.

உலக அரங்கில் மலேசியாவின் நனி சிறந்த பண்புகளுக்கும் கலாச்சாரத்திற்கும் ஒரு மிகப்பிரமாண்டமான மேடையாக 2026 மலேசியா வருகை ஆண்டு பிரச்சாரத்திற்கான கவுண்ட்டவுன் திகழ்ந்தது. இந்த நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான உள்நாட்டு, வெளிநாட்டு வருகையாள்கள் வருகை தந்து நிகழ்ச்சியை பிரமாண்டமாக்கினர்.

இசையுடன் கூடிய வாணவேடிக்கை, டுரோன் உருவாக்கங்கள், லேசர் காட்சிகள் வருகையாளர்களின் கவனத்தைச் சுண்டி இழுத்தது. இந்தப் பிரச்சாரத்தின் மாஸ்கோட் ஆக மலாயா கரடிகளான வீரா, மஞ்சா ஆகியவை வருகையாளர்களை ஆர்ப்பரிக்க வைத்தன. பிரபலங்களின் கலைப்படைப்பும் நிகழ்ச்சிக்கு மெருகூட்டியது.

கலாச்சார நிகழ்ச்சிகளும் மலேசியத் தன்மையை பிரதிபலித்தன. பாரம்பரிய இசைகள் காதுகளுக்கு இனிமை சேர்த்தன. மலேசியாவின் வளம் மிக்க பாரம்பரியம், மரபு ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் வகையில் ஒவ்வொரு படைப்பும் இடம்பெற்றது.

பெவிலியன் புக்கிட் ஜாலிலில் அமைக்கப்பட்டிருக்கும் 2026 மலேசிய வருகை ஆண்டு பசாரும் பெரும் வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து புக்கிட் பிந்தாங் 2026 மலேசிய வருகை ஆண்டு உணவுப் பசாரும் லோட் டென் உணவு மையங்களும் மலேசியாவின் தனித்துவ உணவு வகைகளை மக்களுக்குப் படைத்தன.

இந்த பிரமாண்ட நிகழ்ச்சிக்கு டிபிகேஎல் எனப்படும் கோலாலம்பூர் மாநகர் மன்றம் வலுவான ஆதரவை வழங்கிய நிலையில் பிரதான பங்காளியாக டூரிசம் மலேசியா திகழ்ந்தது. அதேசமயம் இஸ்தானா புடாயா, தேசிய கலாச்சாரம், கலை இலாகா, தேசிய பாரம்பரிய இலாகா, மலேசிய கைவினை மேம்பாட்டு கார்ப்பரேஷன் ஆகிய அமைப்புகளும் இந்த நிகழ்ச்சியின் மாபெரும் வெற்றிக்குத் துணையாக இருந்தன.

2026 வருகை ஆண்டு ஹரிராயா, சீனப்புத்தாண்டு, தீபாவளி போன்ற பெரு நாட்களின் மகிமைகளையும் பிரதிபலிக்கும் நிகழ்ச்சிகளை நடத்தும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here