நீதிமன்றத் தீர்ப்பை விமர்சித்த விவகாரம்: திரெங்கானு ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ரசாலிக்கு 2,000 ரிங்கிட் அபராதம்!

கோலாலம்பூர்:

திரெங்கானு மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும், கிஜால் (Kijal) தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான டத்தோ ரசாலி இட்ரிஸ், தேசநிந்தனை சட்டத்தின் கீழ் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு 2,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2023-ஆம் ஆண்டு நவம்பர் 10-ஆம் தேதி, திரெங்கானுவின் கெமாமான் பகுதியில் நடைபெற்ற அரசியல் கூட்டத்தில், நீதிமன்றத்தின் தீர்ப்புகள் அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படுவதாக ரசாலி பேசியிருந்தார்.

குறிப்பாக, துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அமாட் ஜாஹிட் ஹமிடி மற்றும் மூவார் எம்பி சையத் சாதிக் ஆகியோரின் நீதிமன்ற வழக்குகளில் மாறுபட்ட தீர்ப்புகள் வழங்கப்பட்டதை அவர் விமர்சித்திருந்தார்.

இவர் மீது 1948-ஆம் ஆண்டு தேசநிந்தனைச் சட்டத்தின் பிரிவு 4(1)(b)-இன் கீழ் குற்றம் சுமத்தப்பட்டது. அரசுத் தரப்பு சந்தேகத்திற்கு இடமின்றி குற்றத்தை நிரூபித்துள்ளதால், ரசாலிக்கு 2,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படுகிறது என்று, கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி நோர்மா இஸ்மாயில் இன்று வழங்கிய தீர்ப்பில் கூறினார்.

ஒருவேளை அவர் இந்த அபராதத்தைச் செலுத்தத் தவறினால், 3 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்.

மலேசியச் சட்டப்படி, ஒரு மக்கள் பிரதிநிதிக்கு 2,000 ரிங்கிட்டிற்கு மேல் அபராதம் அல்லது ஒரு வருடத்திற்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்பட்டால் மட்டுமே அவர் தனது பதவியை இழப்பார். ரசாலிக்கு சரியாக 2,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதால், அவர் தனது சட்டமன்ற உறுப்பினர் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர் பதவியில் நீடிக்க முடியும்.

முன்னதாக, அரசுத் தரப்பு வழக்கறிஞர் இஸாத் அமீர் இதாம், ரசாலி ஒரு செல்வாக்கு மிக்க நபர் என்பதால் அவருக்குச் சிறை தண்டனை வழங்க வேண்டும் என்று வாதிட்டார். இருப்பினும், ரசாலியின் வழக்கறிஞர், அந்த வீடியோ சமூக வலைதளத்திலிருந்து நீக்கப்பட்டுவிட்டதாகவும், இது பொதுமக்களிடையே பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றும் கூறி குறைந்தபட்ச தண்டனையை வேண்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here