கோலாலம்பூர்:
பெர்சத்து கட்சியின் உச்சமன்ற உறுப்பினரும், இண்டெரா மாஹ்கோத்தா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ சைஃபுடின் அப்துல்லா (Saifuddin Abdullah), கட்சியின் அரசியலமைப்பை மீறியதாகக் கூறி இன்று (ஜனவரி 6, 2026) கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
கட்சியின் அரசியலமைப்பின் பிரிவு 9.1.4-ஐ மீறியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, கட்சியின் தலைவரான டான்ஸ்ரீ முஹிடின் யாசின் பதவியை விட்டு விலக வேண்டும் என்று பகிரங்கமாக அழைப்பு விடுத்ததே இந்த நீக்கத்திற்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.
முஹிடின் யாசின் தனது தலைமைத்துவத் தகுதியை இழந்துவிட்டதாகக் குறிப்பிட்ட சைஃபுடின், அஸ்மின் அலி உள்ளிட்ட மூத்த தலைவர்களும் பதவி விலக வேண்டும் என்றும், கட்சிக்கு புதிய முகம் தேவை என்றும் வலியுறுத்தி வந்தார்.
முஹிடின் யாசினின் மருமகன் முகமட் அட்லான் பெர்ஹான் (Adlan Berhan) வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றது குறித்து முகைதின் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் தலைவர் டத்தோ முகமட் ராட்ஸி மனான் கையெழுத்திட்ட கடிதத்தின்படி, சைஃபுடினின் நீக்கம் உடனடியாக அமலுக்கு வருகிறது.
இந்த நீக்கம் குறித்து கருத்து தெரிவித்துள்ள சைஃபுடின், தனக்கு இன்று மாலை நோட்டீஸ் கிடைத்ததை உறுதிப்படுத்தினார். இருப்பினும், இந்த முடிவை எதிர்த்து இன்னும் சில நாட்களில் மேல்முறையீடு (Appeal) செய்யப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த அக்டோபர் 27, 2025 அன்று, பகாங் மாநில பெரிக்காத்தான் நேஷனல் (PN) தலைவர் பதவியிலிருந்தும் அவர் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.




















