புத்ராஜெயா:
இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் புதிய பாஸ்போர்ட் மற்றும் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட ‘MyKad’ (தேசிய அடையாள அட்டை) ஆகியவற்றை அரசு அறிமுகப்படுத்த உள்ளது.
இந்த புதிய மாற்றங்கள் முக்கியமாக மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களை மையமாகக் கொண்டு அமையும் என்று
உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் கூறியுள்ளார்.
பாஸ்போர்ட் மற்றும் அடையாள அட்டை ஆகிய இரண்டும் நாட்டின் பாதுகாப்பிற்கு மிக முக்கியமான ஆவணங்கள் என்பதால் இந்த மாற்றம் அவசியமாகிறது என்றார்.
இது தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல. தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்கு ஏற்ப பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். இதன் மூலம் ஆவணங்கள் போலியாகத் தயாரிக்கப்படுவதைத் தடுக்க முடியும். இந்த புதிய பாதுகாப்பு அம்சங்கள் சர்வதேச தரத்திற்கு ஏற்பவும், நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியும் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.



















