ஜார்ஜ்டவுன்:
ஹரியான் மெட்ரோ நாளிதழுடன் இணைந்து PTPTN ஏற்பாட்டிலான 2026 மீண்டும் பள்ளிக்குப் போகலாம் எனும் நிகழ்ச்சி வழி பி40 குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளின் கல்விக் கனவுகளை நனவாக்கும் தன்னுடைய கடப்பாட்டைத் தொடர்கிறது.

இத்திட்டமானது PTPTN அதன் சமூகக் கடப்பாட்டுப் பொறுப்புடைமையின் கீழ் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. வசதியற்றோரின் குறிப்பாக பெற்றோர், பாதுகாவலர் ஆகியோரின் நிதிச்சுமையைக் குறைப்பதற்கு மிகுந்த பரிவுடன் தொடர்ச்சியாக இத்திட்டத்தை தேசிய உயர்கல்வி நிதியகம் (PTPTN) நடத்தி வருகிறது.
புதிய பள்ளித் தவணை தொடங்கும்போது தங்களின் பிள்ளைகளை அதற்குத் தயார்ப்படுத்தும் வகையில் வசதியற்ற பெற்றோருக்கு ஆதரவாக இத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. தேர்வு செய்யப்பட்ட பிள்ளைகள் ஒரு ஜோடி சீருடை, ஒரு புதிய பள்ளிப் பை ஆகியவற்றைப் பெறுவர்.

PTPTN – ஹரியான் மெட்ரோ இடையிலான வியூக ஒத்துழைப்பு மலேசியப் பிள்ளைகள் கல்வியை தங்குதடையின்றி மேற்கொள்வதற்கு அதீத முயற்சிகளுடன் அவர்களின் கனவை நனவாக்குகிறது. இதுவே PTPTN விருப்பமாகவும் இருக்கிறது. இளம் தலைமுறையினருக்கு கல்வியில் மிகச்சிறந்த வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதையும் அது தன்னுடைய இலக்காகக் கொண்டிருக்கிறது. வசதி குறைந்த மாணவர்களுக்கு உதவுவதைத் தன்னுடைய சமூகக் கடப்பாடாக PTPTN தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
மீண்டும் பள்ளிக்குத் திரும்புவோம் 2026 எனும் நிகழ்ச்சி PTPTN – ஹரியான் மெட்ரோ கூட்டு ஏற்பாட்டில் பினாங்கு, தாசேக் குளுகோர், மிட் டவுன் பெர்டா, டாலியா அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை PTPTN தலைவர் டத்தோஸ்ரீ நோர்லிஸா அப்துல் ரஹிம் நிறைவு செய்துவைத்தார்.
இதில் ஹரியான் மெட்ரோ குழும ஆசிரியரும் தித்திப்பான் காசே ஹரியான் மெட்ரோ திட்டத் தலைவருமான ஹுசேன் ஜாஹிட், ஒருங்கிணைப்பு அதிகாரி டத்தோ ஒமார் பின் ஹாஜி அப்துல் ஹமிட், திட்டமிடல் பிரிவு துணை இயக்குநரும் பினாங்கு மாநிலக் கல்வி இலாகா நிர்வாகப் பிரிவு துணை இயக்குநருமான முகமட் ஸவாவி அமாட், PTPTN சந்தை, கார்ப்பரெட் தொடர்புப் பிரிவு தலைமை நிர்வாகி புவான் வான் ஸாவியா வான் அபு பாக்கார், பினாங்கு மாநில PTPTN அலுவலக இயக்குநர் முகமட் முசின் பின் அப்துல் ரஹ்மான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

பினாங்கு மாநிலத்தில் தேர்வு செய்யப்பட்ட 4 பள்ளிகளைச் சேர்ந்த பி40 பிரிவின் 200 ஏழை மாணவர்கள் இத்திட்டத்தின் வழி பயன்பெற்றனர். பெங்காலான் ஜெயா தேசிய ஆரம்பப்பள்ளி, பொக்கோ கெத்தாப்பாங் தேசியப்பள்ளி, பக்தி தாசேக் குளுகோர் தேசிய இடைநிலைப்பள்ளி, தாசேக் குளுகோர் தேசிய இடைநிலைப்பள்ளி ஆகியவையே தேர்வு செய்யப்பட்ட அந்த 4 பள்ளிகளாகும்.
இந்த மாணவர்கள் ஒரு ஜோடி சீருடை, ஒரு பள்ளிப்பை ஆகியவற்றைப் பெறுவர். இதற்காக PTPTN 43,600 ரிங்கிட் வழங்கி இருக்கிறது. அதேசமயம் மீடியா பிரிமா பெர்ஹாட் இந்த மாணவர்களுக்கு Simpan SSPN Prime கணக்குத் திறக்கப்படுவதற்கு 20 ஆயிரம் ரிங்கிட் வழங்கி இருக்கிறது. இதன்வழி ஒவ்வொரு மாணவருக்கும் தலா 100 ரிங்கிட் அவர்களின் இந்தக் கணக்கில் வரவு வைக்கப்படும். இந்தத் திட்டத்தில் பினாங்கு மாநில கல்வி இலாகா சம்பந்தப்பட்டிருக்கிறது.
உயர்கல்வியில் நம்முடைய மாணவர்கள் சாதனைகளைப் படைக்க வேண்டும் என்ற பிரதான இலக்கை PTPTN கொண்டிருக்கிறது என்று டத்தோஸ்ரீ நோர்லிஸா அப்துல் ரஹிம் குறிப்பிட்டார். அதேசமயம் நிதிப் பிரச்சினையால் எந்தவொரு மாணவரும் கல்வியில் இருந்து விடுபட்டு விடக்கூடாது என்பதில் அதீத அக்கறை கொண்டிருக்கும் PTPTN அதன் கார்ப்பரெட் சமூகப் பொறுப்புடைமைத் திட்டத்தின் கீழ் தொடர்ந்து நிதி உதவி வழங்கும் என்று அவர் சொன்னார்.
இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்து முடிவதற்கு ஒத்துழைப்பு நல்கிய அனைத்துத் தரப்பினருக்கும் நன்றி தெரிவித்த அவர், ஏழை மாணவர்களுக்கு உதவும் திட்டத்தில் மீடியா பிரிமா, ஹரியான் மெட்ரோ வியூக ஒத்துழைப்பு தொடரும் என்றார்.

























