கொழும்பு:
இலங்கையில் 3,563 காரட் எடை கொண்ட ஒரு அரிய வகை ஊதா நிற நட்சத்திர நீலக்கல் (Purple Star Sapphire) கடந்த சனிக்கிழமை (ஜனவரி 17, 2026) தலைநகர் கொழும்பில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த விலைமதிப்பற்ற கல்லிற்கு “தூய்மையான மண்ணின் நட்சத்திரம்” (Star of Pure Land) என்று பெயரிடப்பட்டுள்ளது.
சர்வதேச மாணிக்கக்கல் நிபுணர்களின் கூற்றுப்படி, இதன் மதிப்பு 220 மில்லியன் பவுண்டுகள் (சுமார் 300 மில்லியன் டாலர்) முதல் 400 மில்லியன் டாலர் வரை இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இது இயற்கை முறையில் உருவான, உலகிலேயே மிகப்பெரிய ஊதா நிற நட்சத்திர நீலக்கல்லாகும். இதன் மேற்பரப்பில் ஆறு கதிர்கள் கொண்ட நட்சத்திர வடிவம் (Asterism) மிகத் தெளிவாகத் தெரிவது இதன் தனிச்சிறப்பாகும்.
இந்த நீலக்கல் 2023-ஆம் ஆண்டு ‘மாணிக்கக்கல் நகரம்’ என்று அழைக்கப்படும் இரத்தினபுரியில் உள்ள ஒரு சுரங்கத்தில் கண்டெடுக்கப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக இதன் உரிமையாளர்கள் தங்களது பெயரை வெளிப்படுத்த விரும்பவில்லை. தற்போது இக்கல்லை விற்பனை செய்ய அவர்கள் தயாராக உள்ளனர்.

இக்கல்லின் தரம் மற்றும் உண்மைத்தன்மை குறித்து இரண்டு சர்வதேச ஆய்வகங்கள் சான்றிதழ் அளித்துள்ளன.
இலங்கையின் மாணிக்கக்கல் வரலாற்றில் இதற்கு முன்பும் பல மிகப்பெரிய கற்கள் கிடைத்துள்ளன:
2021ஆம் ஆண்டு சுமார் 100 மில்லியன் டாலர் மதிப்புள்ள 510 கிலோ எடையுள்ள ‘Serendipity Sapphire’ என்ற நீலக்கல் கொத்து கல் கண்டெடுக்கப்பட்டது.
2016 இல் தாமின் நட்சத்திரம்’ (Star of Adam) என்ற 1,404 காரட் நீலக்கல் இரத்தினபுரியில் கிடைத்தது.
தற்போது கிடைத்துள்ள இந்த ஊதா நிற நீலக்கல், இலங்கையின் மாணிக்கக்கல் சந்தையை சர்வதேச அளவில் மீண்டும் ஒருமுறை உற்றுநோக்க வைத்துள்ளது.

























