2 ஆண்டுகளுக்குப்பின் எகிப்து உடனான காசா எல்லையை திறக்கும் இஸ்ரேல்

ஜெருசலேம்,காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.

இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தியது. அதேவேளை, பணய கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், ராணுவ நடவடிக்கை மூலமும் இஸ்ரேல் மீட்டது.

இதையடுத்து, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் முயற்சியால் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 10ம் தேதி இஸ்ரேல் , ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.

இதனிடையே, போரின் போது எகிப்து உடனான காசா முனை எல்லையை இஸ்ரேல் மூடியது. எகிப்தில் இருந்து ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கு ஆயுதங்கள் கடத்தப்படுவதை தடுக்க எல்லை மூடப்படுவதாக இஸ்ரேல் அறிவித்தது. மேலும், எகிப்தில் இருந்து காசாவுக்குள் நுழைய யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.

அதேவேளை, காசா முனையில் இருந்த இஸ்ரேலிய பணய கைதிகள் அனைவரும் உயிருடனோ, சடலமாகவோ மீட்கப்பட்டனர். இறுதியாக கடந்த திங்கட்கிழமை கடைசி இஸ்ரேலிய பணய கைதியின் உடல் மீட்கப்பட்டது. இதன் மூலம் காசா முனையில் இஸ்ரேலிய பணய கைதிகள் யாரும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 2 ஆண்டுகளுக்குப்பின் எகிப்து உடனான காசா எல்லையை இஸ்ரேல் திறக்க உள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் காசா முனையில் இருந்து எகிப்து செல்ல பயன்படுத்தப்படும் ரபா எல்லையை இஸ்ரேல் நாளை திறக்க உள்ளது.

போரின் போது காசாவில் இருந்து எகிப்து சென்ற பாலஸ்தீனியர்கள் இந்த எல்லை வழியாக மீண்டும் காசா திரும்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் பாதுகாப்புப்படையின் ஒப்புதலுக்குப்பின் பாலஸ்தீனியர்கள் காசாவுக்குள் அனுமதிக்கப்பட உள்ளனர். இந்த எல்லைப்பகுதியில் ஐரோப்பிய யூனியனின் பாதுகாப்புப்படை வீரர்கள் கண்காணிப்புப்பணியில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here