கோலாலம்பூர்:
தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டுப் பேரா மாநில போலீசார் மேற்கொண்ட தீவிரக் கண்காணிப்பு நடவடிக்கைகளின் போது, விதிமீறல்களில் ஈடுபட்ட இருவர் பிடிபட்டனர்.
நேற்று முற்பகல் 11.30 மணியளவில், ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயப் பகுதியில் 34 வயதுடைய நபர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் சோதனையிடப்பட்டார். அவரிடமிருந்து ஒரு ‘காய்கறி கத்தி’ கண்டெடுக்கப்பட்டது. இருப்பினும் தற்காப்பிற்காகவே தான் அந்தக் கத்தியை வைத்திருந்ததாக அந்த நபர் கூறினார்.
இருப்பினும், அந்த நபருக்கு ஏற்கனவே வன்முறை மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றப் பின்னணிகள் இருப்பதால், அவர் கத்தி வைத்திருப்பது நியாயமற்றது எனக் கருதிய போலீசார் அவரைக் கைது செய்தனர்.
அவர் மீது 1958-ஆம் ஆண்டு அரிப்பு மற்றும் வெடிக்கும் பொருட்கள் மற்றும் அபாயகரமான ஆயுதங்கள் சட்டத்தின் பிரிவு 6(1)-இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அவர் 3 நாட்கள் போலீஸ் காவலில் (Remand) வைக்கப்பட்டுள்ளார்.
இன்று அதே பகுதியில், மலேசிய சிவில் ஏவியேஷன் ஆணையத்தின் (CAAM) அனுமதி இன்றி ட்ரோன் பறக்கவிட்ட 80 வயது முதியவர் ஒருவரைப் போலீஸ் வான்படையின் ட்ரோன் பிரிவு தடுத்து நிறுத்தியது.
மேலும் அந்த முதியவர் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டாலும், அவரது ட்ரோன் மேலதிக விசாரணைக்காகப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பேரா மாநிலத் துணை போலீஸ் தலைவர் டிசிபி முகமது அஸ்லின் சதாரி கூறுகையில், தைப்பூசத் திருவிழாவையொட்டி மாநிலம் முழுவதும் மொத்தம் 763 போலீஸ் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

























