சென்னை: கடலோர காவல் படை 50-வது நிறுவன தினம் விமரிசையாக கொண்டாட்டம்

சென்னை,இந்திய கடலோர காவல் படையின் 50-வது நிறுவன தினம், சென்னை, கடலோர காவல் படை கிழக்கு பிராந்திய தலைமையகத்தில் இன்று விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில், தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவி, மத்திய, மாநில அரசு அலுவலர்கள் மற்றும் வெளிநாட்டு தூதரகங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

சென்னையில் வசிக்கும் இந்திய கடலோர காவல் படையின் முன்னாள் வீரர்கள் பலரும் இதில் கலந்து கொண்டு, இப்படை மீதான தங்கள் பிணைப்பை வெளிப்படுத்தினர்

இந்திய கடலோர காவல் படையின் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் ஆந்திர பிரதேசத்தில் உள்ள கப்பல்கள், விமானங்கள் போன்றவை ஐ.ஜி. தத்விந்தர் சிங் சைனி தலைமையிலான சென்னை, கடலோர காவல் படை பிராந்திய (கிழக்கு) தலைமையகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வருகின்றன.

இந்திய கடலோர காவல் படையின் 50-வது நிறுவன தினத்தை கொண்டாடும் வகையில், கடலோர காவல் படை பிராந்திய (கிழக்கு) தலைமையகத்தின் கீழ் உள்ள பிரிவுகள் சென்னை, விசாகப்பட்டினம், தூத்துக்குடி மற்றும் ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள பிற கடலோர காவல் படை நிலையங்களில் பல நிகழ்வுகளை நடத்தின.

அவற்றில் சிறப்பு தூய்மை இயக்கம், மீனவர்களுடன் சமூக கலந்துரையாடல் மற்றும் கடலோர தூய்மைப்பணி, பள்ளி மாணவர்களுக்கான ஓவியப்போட்டி மற்றும் வினாடி வினா போட்டி போன்றவற்றுடன் மீனவர்களுடன் மோட்டார் மற்றும் மிதிவண்டி பேரணி மற்றும் விளையாட்டு போட்டிகள் ஆகியவை அடங்கும். இந்த நிகழ்வுகள் கடல்சார் சேவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், உயிர்களின் பாதுகாப்பையும், கடல்சார் சுற்றுச்சூழலை பாதுகாப்பதையும் நோக்கமாக கொண்டிருந்தன. இது தவிர, 3 மாநிலங்களிலும் மீனவ குடும்பங்களுக்காக சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம்களும் நடத்தப்பட்டன.

இந்திய கடலோர காவல் படை, 1978-ம் ஆண்டு கடலோர காவல் படை சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அதன் கடமைகளை நிறைவேற்றுவதில் உறுதியாக உள்ளது. அதிநவீன கப்பல்கள் மற்றும் விமானங்களை தனது பணியில் சேர்ப்பதன் மூலம், இந்திய கடலோர காவல் படை, இந்திய கடல்சார் மண்டலத்திற்குள் ஏற்படும் எந்தவொரு சூழ்நிலையையும் சமாளித்து, உயிர்கள் மற்றும் சொத்துகளையும், அத்துடன் தேசத்தின் கடல்சார் நலன்களையும் பாதுகாக்க தயாராக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here