ஏர் ஏசியா விமானத்தில் அநாகரீகச் செயல்: பேங்காக் விமான நிலையத்தில் ரகளையில் ஈடுபட்ட ரஷ்யப் பயணி கைது

பேங்காக்:

வியட்நாமின் நா ட்ராங் (Nha Trang) நகரிலிருந்து தாய்லாந்து தலைநகர் பேங்காக் நோக்கிச் சென்ற ஏர் ஏசியா (AK647) விமானத்தில், கடந்த ஜனவரி 29 அன்று ரஷ்ய மொழி பேசும் பயணி ஒருவர் போதையில் அநாகரீகமாக நடந்துகொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, திடீரென தனது ஆடைகளைக் களைந்துவிட்டு உள்ளாடையுடன் நின்ற அந்த நபர், இருக்கைகள் மீது ஏறி குதித்தும், சக பயணிகளிடம் வம்பு செய்தும் ரகளையில் ஈடுபட்டார். மேலும், விமானத்தின் கதவைத் திறக்க முயன்ற அவர், தான் கீழே குதிக்கப் போவதாகக் கூச்சலிட்டு மிரட்டியது விமானத்திற்குள் பெரும் பதற்றத்தை உருவாக்கியது.

விமான ஊழியர்களின் எச்சரிக்கைகளையும் மீறி அந்த நபர் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டதால், நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த விமானி அவசரகால நிலையை அறிவித்தார். இதையடுத்து, பேங்காக்கின் டான் மியூயெங் (Don Mueang) சர்வதேச விமான நிலையத்தில் முன்னுரிமை அடிப்படையில் விமானம் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. விமானம் நின்றவுடன், படிக்கட்டுகள் முழுமையாகப் பொருத்தப்படுவதற்கு முன்பே அந்த நபர் கீழே குதித்துத் தப்பியோட முயன்றார். இதில் அவருக்குக் காலில் காயம் ஏற்பட்டது.

ஓட முயன்ற அவரை விமான நிலையப் பாதுகாப்புப் படையினர் விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர். தற்போது அந்த நபர் தாய்லாந்து அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, அவர் மீது விமானப் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவித்தல், பொதுமக்களுக்கு இடையூறு செய்தல் மற்றும் பணியாளர்களின் உத்தரவை மீறுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், சர்வதேச விமானப் போக்குவரத்து விதிகளின்படி அவருக்குக் கடுமையான அபராதம் அல்லது சிறைத் தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here