கிரீன்லாந்தில் பிரான்ஸ், கனடியத் துணைத்தூதரகங்கள் திறப்பு

நூக்:

பிரான்சும் கனடாவும் கிரீன்லாந்துத் தலைநகர் நூக்கில் புதிய துணைத்தூதரகங்களை வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 6) திறந்துள்ளன.

நேட்டோ கூட்டணியில் நட்பு நாடாக இருக்கும் டென்மார்க்கிற்கு இரு நாடுகளும் ஆதரவு தெரிவிக்கும் விதமாகத் துணைத்தூதரகங்கள் நிறுவப்பட்டுள்ளன.

ஆர்க்டிக் வட்டாரத்தில் அமைந்துள்ள கிரீன்லாந்தைக் கைப்பற்றப்போவதாக அமெரிக்கா அச்சுறுத்திய நிலையில் பிரான்சும் கனடாவும் அண்மை முடிவை எடுத்துள்ளன.

பிரான்சின் தலைமைத் தூதராகத் திரு ‌ஷோன்-நோயெல் புவாரியே செயல்படுவார். தமது நியமனம், அமெரிக்க நிர்வாகத்திற்கான செய்தியன்று என்றும் மாறாக அது கிரீன்லாந்து, டென்மார்க் ஆகியவற்றுடனான நட்பைப் பிரதிபலிப்பது என்றார் அவர்.

“அது ஒற்றுமையையும் காட்டுகிறது. நண்பர்கள் தேவைப்படும்போது, யார் யார் நமக்கு ஆதரவாக இருப்பார்கள் என்று பார்ப்பதைப் போன்றது அது. பிரெஞ்சுப் பிரதிநிதிகளாக நாங்கள் இருக்கிறோம். இது யாருக்கு எதிரானது என்பதைவிட யாருடன் இருப்பது என்பதைக் காட்டுவது,” என்று திரு புவாரியே நூக்கில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பிரான்சின் வெளியுறவு அமைச்சர் அடுத்த சில வாரங்களில் நூக்கிற்குச் செல்லவிருக்கிறார். கிரீன்லாந்தில் துணைத்தூதரகத்தைத் திறந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த முதல் நாடு, பிரான்ஸ். பிரான்சின் ஒன்பது குடிமக்கள் கிரீன்லாந்தில் வசிக்கின்றனர்.

கனடிய வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்தும் தலைமை ஆளுநர் மேரி சைமனும் வெள்ளிக்கிழமை கிரீன்லாந்துக்குச் சென்றிருந்தனர். கனடியத் துணைத்தூதரகத்தின் திறப்புவிழாவில் அவர்கள் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here