உலகின் முதல் மனித உடல் வெப்பம் கொண்ட ‘மொயா’ ரோபோ: சீன ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் அதிரடி அறிமுகம்!

ஷாங்காயைத் தளமாகக் கொண்ட ‘DroidUp’ எனும் ஸ்டார்ட்அப் நிறுவனம், ‘மொயா’ (Moya) என்ற உலகின் முதல் பயோமிமெடிக் (Biomimetic) மனித உருவ ரோபோவை அறிமுகப்படுத்தி தொழில்நுட்ப உலகில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய ரோபோக்கள் பெரும்பாலும் இயந்திரத் தன்மையுடன் இருக்கும் நிலையில், மொயா மனிதர்களைப் போன்ற உடல் அமைப்பையும், மிக முக்கியமாக 32 முதல் 36 டிகிரி செல்சியஸ் வரையிலான உடல் வெப்பத்தையும் கொண்டுள்ளது. இதனால் இந்த ரோபோவைத் தொடும்போது ஒரு இயந்திரத்தைத் தொடுவது போலல்லாமல், சக மனிதரைத் தொடுவது போன்ற கதகதப்பான உணர்வை வழங்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

165 சென்டிமீட்டர் உயரமும், 32 கிலோ எடையும் கொண்ட இந்த ரோபோவில் அதிநவீன AI கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் எதிரில் இருப்பவர்களை அடையாளம் கண்டு உரையாடுவது மட்டுமின்றி, முகத்தில் சிறு புன்னகை, கண் சிமிட்டுதல் போன்ற நுணுக்கமான உணர்ச்சிகளையும் இது வெளிப்படுத்துகிறது. குறிப்பாக, இதன் நடை 92 சதவீதம் மனிதர்களின் நடையைப் போன்றே இருக்கும் என நிறுவனம் கூறுகிறது.

இந்த ரோபோக்கள் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு உதவியாகவும், முதியவர்களின் தனிமையைப் போக்கும் ஒரு துணையாகவும் (Companion) பயன்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த ரோபோவின் தோற்றம் மற்றும் நடை குறித்து சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. சில பயனர்கள் இதன் நுணுக்கமான அசைவுகள் வியப்பளிப்பதாகக் கூறினாலும், மற்றவர்கள் இதன் ‘செயற்கையான முகம்’ மற்றும் ‘நடை’ சற்று அச்சத்தை (Creepy) ஏற்படுத்துவதாகத் தெரிவித்துள்ளனர்.

வரும் ஆண்டின் இறுதியில் வணிக ரீதியாக விற்பனைக்கு வரவுள்ள இந்த ரோபோவின் விலை சுமார் 1.2 மில்லியன் யுவான் (இந்திய மதிப்பில் சுமார் ₹1.4 கோடி) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக இது பெரிய நிறுவனங்கள் மற்றும் சுகாதார மையங்களில் மட்டுமே பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here