ஹாலிவுட் ‘வாக் ஆஃப் ஃபேம்’ நட்சத்திரம் பெற்றார் மலேசிய நடிகை மிஷெல் இயோ

லாஸ் ஏஞ்சலிஸ்:

மலேசிய நடிகை மிஷெல் இயோ, அனைத்துலக சினிமாவிற்கு பல ஆண்டுகளாக ஆற்றிய பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில், ஹாலிவுட் ‘வாக் ஆஃப் ஃபேமில்’ ஒரு நட்சத்திரத்துடன் சிறப்பிக்கப்பட்டார்.

64 வயதான அவர் புதன்கிழமை (பிப்ரவரி 18) அன்று லாஸ் ஏஞ்சலிசில் நடந்த விழாவில், கலந்துகொண்டார். 2018ஆம் ஆண்டு வெற்றி பெற்ற ‘கிரேஸி ரிச் ஏஷியன்ஸ்’ இயக்குநர் ஜான் எம். சூ உட்பட அவரது ஹாலிவுட் சகாக்களிடமிருந்து அவரது முன்னோடி சாதனைகளுக்காகக் கைதட்டல்களைப் பெற்றார்.

மேடையில், பொழுதுபோக்குத் துறையில் தமது பயணத்தைப் பற்றி இயோ பேசுகையில், “மலேசியாவிலிருந்து இங்கு வந்த பாதை ஒரு நேர்கோட்டில் இல்லை. நான் இத்துறைக்குப் பொருத்தமானவளா என்று நான் யோசித்த தருணங்கள் இருந்தன.

“ஆனால் எல்லைகளையும் மொழிகளையும் கடந்த கதைகளின் ஒரு பகுதியாக இருப்பது எனக்கு அதிர்ஷ்டம். நாம் அனைவரும் எவ்வளவு ஆழமாக இணைக்கப்பட்டுள்ளோம் என்பதை நினைவூட்டும் கதைகள்,” என்றார்.

திரைப்படத் துறையில் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த தனது வாழ்க்கையில் ஒரு பகுதியாக இருந்த பலரின் ஆதரவை இந்தக் கௌரவம் பிரதிபலிப்பதாக அவர் எடுத்துரைத்தார்.

‘வாக் ஆஃப் ஃபேம்’ அங்கீகாரம், இயோவின் வாழ்க்கையில் தொடர்ச்சியான மைல்கற்களுடன் சேர்கிறது.

2023ஆம் ஆண்டில், 2022ஆம் ஆண்டு வெளியான “எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்” திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான அகாடமி விருதை வென்ற முதல் ஆசியர் என்ற பெருமையைப் பெற்றார்.

பிப்ரவரி மாத தொடக்கத்தில் 76வது பெர்லின் அனைத்துலக திரைப்பட விழாவில் தனது வாழ்நாள் சாதனைக்காகக் கௌரவ தங்கக் கரடி விருதையும் பெற்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here