டெலிகாம் ஊழியர்கள் போல வேடமிட்டு கேபிள் திருட்டு; 9 பேர் கைது; 3 பேருக்கு வலைவீச்சு!

ஷா ஆலம் | மார்ச் 02, 2026:

சிலாங்கூர் மாநிலத்தில் தொடர் கேபிள் திருட்டுகளில் ஈடுபட்டு வந்த ஒரு பெரிய கும்பலைச் சேர்ந்த 9 பேரை மாநிலப் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இதன் மூலம் குறைந்தது மூன்று முக்கிய திருட்டு வழக்குகள் முடிவுக்கு வந்துள்ளன.

கடந்த பிப்ரவரி 23 முதல் பிப்ரவரி 26 வரை நடத்தப்பட்ட சிறப்புச் சோதனையில் 6 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் என மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களின் வயது 19 முதல் 44 வரை இருக்கும் என்று, சிலாங்கூர் மாநிலக் காவல்துறைத் தலைவர் கமிஷனர் டத்தோ ஷசெலி கஹார் (Comm Datuk Shazeli Kahar) இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

இவர்களில் பெரும்பாலானோர் ஏற்கனவே கொள்ளை, போதைப்பொருள் மற்றும் கேபிள் திருட்டு போன்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள். இருவர் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் இருந்தவர்கள்.

இந்தக் கும்பல் பொதுமக்களின் கண்ணில் படாமல் இருக்க மிகவும் தந்திரமான முறைகளைக் கையாண்டுள்ளது. இவர்கள் டெலிகாம் மலேசியா (Telekom Malaysia) லோகோ கொண்ட சட்டைகள், பாதுகாப்பு கவசங்கள் (Vests), தலைக்கவசங்கள் (Helmets) மற்றும் வாகனங்களில் எச்சரிக்கை விளக்குகளைப் (Beacon lights) பயன்படுத்தி ஊழியர்கள் போலவே வேடமிட்டுள்ளனர்.

தரைக்கடியில் உள்ள மேன்ஹோல்களைத் திறக்க மாற்றியமைக்கப்பட்ட இரும்பு கருவிகள், கோடாரிகள் மற்றும் கேபிள் வெட்டிகளைப் பயன்படுத்தியுள்ளனர் என்று அவர் மேலும் கூறினார்.

திருடப்பட்ட கேபிள்கள் மற்றும் அதன் உரைகள் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன. கேபிள் விற்றதன் மூலம் கிடைத்த RM60,000 மதிப்பிலான வங்கி ரசீதுகள் மற்றும் விற்பனை ஆவணங்களையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

கைதான 9 பேரில் 7 பேர் போதைப்பொருள் (Methamphetamine & THC) பயன்படுத்தியது சோதனையில் உறுதியானது.

அதேநேரம் தப்பி ஓடியுள்ள மேலும் மூன்று நபர்களை (29 முதல் 42 வயது வரை) போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்கள் இன்று மற்றும் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவர்கள் மீது முறைப்படி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here