சமூகப் பாதுகாப்பு அமைப்பான பெர்கேசோ, தனது கார்ப்பரேட் சமூகப் பொறுப்புணர்வு (CSR) திட்டத்தின் கீழ், இந்த ரமலான் காலத்தில் தேவையுள்ள மக்களுக்கு 500,000 ரிங்கிட்டிற்கும் அதிகமான மதிப்பிலான அன்பளிப்பையும் நிதி உதவிகளையும் வழங்கியுள்ளது. இன்று நடைபெற்ற பெர்கேசோவின் நோன்பு துறப்பு நிகழ்வில் இந்த நிதிகளை மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ இரமணன் இராமகிருஷ்ணன் எடுத்து வழங்கினார்.
இதுகுறித்து உரையாற்றிய ரமணன், இத்தகைய திட்டங்கள் மக்களின் நலனை உறுதி செய்வதற்கான அமைச்சின் இலக்கோடு ஒத்துப்போவதாகக் குறிப்பிட்டார். எந்தவொரு சமூகப் பிரிவினரும் சமூகப் பாதுகாப்பு வளையத்திலிருந்து விடுபடாமல் இருப்பதை உறுதி செய்வதே எங்களின் நோக்கம் என அவர் வலியுறுத்தினார்.
மேலும், சிங்கப்பூரில் பணிபுரியும் சுமார் 400,000 மலேசியர்களுக்கான ‘ஸ்கிம் பெங்கெம்பாரா’ (Skim Pengembara) சமூகப் பாதுகாப்புத் திட்டம் குறித்த ஆய்வுகள் முழுமையாக நிறைவடைந்துள்ளதாகவும், திட்டமிட்டபடி இவ்வருட இறுதியில் இது அமல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்து கொண்டார்.
300,000 மதிப்பிலான பலன்கள் அடிப்படையில் தொழிலாளர் பாதுகாப்பு (லிண்டுங் பெகெர்ஜா) உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் 15 பயனாளர்களுக்கு இந்தப் பலன்கள் வழங்கப்பட்டன. கடந்த ஆண்டு ஜூலை மாதம் பணியிடத்தில் ஏற்பட்ட விபத்தில் இடது கண் பார்வையை இழந்த 28 வயதான ஐடல் ஹியாயத் அப்துல் ஹாதி என்பவருக்கு, 82,000 ரிங்கிட்டுக்கும் அதிகமான ‘நிரந்தர மாற்றுத்திறனாளி பலன்’ நிதி வழங்கப்பட்டது.
அத்துடன் ரமலானை முன்னிட்டு 100 ஆதரவற்ற சிறுவர்களுக்கு பணம் அன்பளிப்பும், 40 தனித்து வாழும் தாய்மார்கள், முதியவர்களுக்கு அன்பளிப்பு கூடைகளும் வழங்கப்பட்டன. மேலும், 10 அரசு சாரா அமைப்புகள், உள்ளூர் நல வாரியங்களுக்கு மொத்தம் 100,000 ரிங்கிட் நிதி உதவி பகிர்ந்தளிக்கப்பட்டது எனவும் ரமணன் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் மனிதவளத் துணை அமைச்சர் டத்தோ கைரில் ஃபிர்தௌஸ் அக்பர் கான், அமைச்சின் பொதுச் செயலாளர் டத்தோ அஸ்மான் முகமட் யூசோப், பெர்கேசோவின் உயர்மட்ட மேலாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
எம்.எஸ். மலையாண்டி
ராமேஸ்வரி ராஜா
எஸ். சண்முகம்










