கோலாலம்பூர்:
பெர்லிஸ், அராவுவில் போக்குவரத்துச் சிக்னலை மீறி போலீசாரிடம் இருந்து தப்பியோட முயன்ற காதலர்கள் இருவரைப் போலீசார் விரட்டிப் பிடித்துக் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சுமார் RM13,830 மதிப்புள்ள 419.82 கிராம் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நேற்று இரவு 10.40 மணியளவில் நடத்தப்பட்ட போக்குவரத்து அமலாக்க நடவடிக்கையின் போது, கருப்பு நிற ‘ஹோண்டா ஆர்எஸ்எக்ஸ்’ (Honda RSX) மோட்டார் சைக்கிளில் வந்த இத்தம்பதியர் சிவப்புச் சிக்னலை மதிக்காமல் சென்றதால் போலீசார் அவர்களை நிறுத்த முற்பட்டனர் என அராவு மாவட்ட காவல்துறைத் தலைவர் சுப்ரிடெண்டண்ட் அகமட் மொஹ்சின் முகமட் ரோடி தெரிவித்தார்.
போலீசாரைக் கண்டதும் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் தப்பியோடிய அவர்களைப் போலீசார் பின்தொடர்ந்து விரட்டிச் சென்று தாமான் ஸ்ரீ வாங்கில் (Taman Sri Wang) மடக்கிப் பிடித்தனர்.
அவர்கள் வைத்திருந்த கருப்புப் பையைச் சோதனை செய்ததில், RM9,500 மதிப்புள்ள 380.45 கிராம் ஹெராயின் (Heroin) மற்றும் RM4,330 மதிப்புள்ள 39.7 கிராம் மெத்தாம்பேட்டமின் (Methamphetamine) போதைப்பொருள் அடங்கிய 13 பிளாஸ்டிக் பாக்கெட்டுகள் மற்றும் ஒரு டிஜிட்டல் தராசு ஆகியவை கண்டெடுக்கப்பட்டன.
கைது செய்யப்பட்டவர்களில் 38 வயதுடைய ஆடவர் கார் பெயிண்டராகவும், 43 வயதுடைய பெண்மணி வியாபாரியாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் இருவருக்குமே நடத்தப்பட்ட போதைப்பொருள் சோதனையில் ‘மெத்தாம்பேட்டமின்’ பாவித்திருப்பதாக முடிவு வந்துள்ளது.
இவ்வழக்கு ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 1952-இன் பிரிவு 39B மற்றும் 39A(2)-இன் கீழ் விசாரிக்கப்பட்டு வரும் வேளையில், சந்தேக நபர்கள் இருவரும் இன்று முதல் 7 நாட்களுக்குத் தடுப்புக் காவலில் (Remand) வைக்கப்பட்டுள்ளனர்.




















