வாஷிங்டன்:
மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் தனது அண்டை நாடுகளிடம் மன்னிப்புக் கோரி சரணடைந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை (மார்ச் 7) தெரிவித்துள்ளார்.
தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) சமூக வலைதளப் பதிவில் இதனை உறுதிப்படுத்திய அவர், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தொடர் தாக்குதல்கள் காரணமாகவே ஈரான் இந்த முடிவுக்கு வந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அண்டை நாடுகளைத் தாக்கும் செயல்களை நிறுத்தப் போவதாக ஈரான் வாக்குறுதி அளித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈரானிய அதிபர் மசூத் பெஸெஷ்கியன் அண்டை நாடுகளிடம் மன்னிப்புக் கோரியதைத் தொடர்ந்து, ஈரானின் இடைக்காலத் தலைமைத்துவ அமைப்பும் ஒரு முக்கிய ஒப்புதலை அளித்துள்ளது. இதன்படி, அண்டை நாடுகளிலிருந்து தங்களுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தப்படாத வரை, தாங்களும் தாக்குதல்களில் ஈடுபடப்போவதில்லை என ஈரான் உறுதி அளித்துள்ளது. இருப்பினும், ஈரானின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை எனக் குறிப்பிட்டுள்ள அதிபர் டிரம்ப், ஈரானின் ஆக்ரோஷமான நடவடிக்கைகளுக்காக இதுவரை தாக்கப்படாத இலக்குகளையும் குறிவைத்து முழுமையான அழிவை ஏற்படுத்துவது குறித்து தீவிர ஆலோசனைகள் நடந்து வருவதாக எச்சரித்துள்ளார்.
மறுபுறம், லெபனானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பு தனது ஆயுதங்களைக் கைவிட வேண்டும், இல்லையெனில் லெபனான் மிக மோசமான பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று இஸ்ரேலிய தற்காப்பு அமைச்சர் இஸ்ரெயில் காட்ஸ் லெபனான் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “லெபனானுடன் எங்களுக்கு எல்லைப் பிரச்சனைகள் ஏதுமில்லை. அதேசமயம், லெபனான் எல்லையிலிருந்து இஸ்ரேலை நோக்கித் தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதல்களை எங்களால் இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது” என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
லெபனான் அரசாங்கம் உடனடியாகச் செயலில் இறங்கி, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையெனில் இஸ்ரேல் தனது பாதுகாப்பிற்காக இராணுவ ரீதியாகப் பதிலடி கொடுக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். மத்திய கிழக்கில் நிலவும் இந்தத் தொடர் அரசியல் மாற்றங்கள் மற்றும் போர் அச்சுறுத்தல்கள் சர்வதேச அளவில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன.




















