அரசியலில் இருப்பவர்கள் அனைவரும் துன் அவர்களின் வாழ்வை ஒரு பாடமாகக் கொள்ள வேண்டும்: டத்தோஸ்ரீ எம். சரவணன் ​

ம.இ.கா-வின் முன்னாள் தேசியத் தலைவர் துன் ச. சாமிவேலுவின் 90-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ‘நினைவலைகள்’ எனும் சிறப்பு நிகழ்வு ம.இ.கா தலைமையகத்தில் உள்ள நேதாஜி மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வை ஏற்று நடத்திய தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும், ம.இ.கா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம். சரவணன், துன் அவர்களின் அரும்பணிகளை நினைவு கூர்ந்து உரையாற்றினார்.

 

​ “மலேசிய இந்திய சமூகம் கல்வித் துறையில் மேம்பட வேண்டும் என்பதை தனது வாழ்நாள் தாரக மந்திரமாகக் கொண்டிருந்தவர் துன் ச. சாமிவேலு. ‘வீட்டுக்கொரு பட்டதாரி’ என்ற உன்னத இலக்கை அடைய அவர் மேற்கொண்ட முயற்சிகள் இன்று பல குடும்பங்களில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கல்வியின் மூலம் மட்டுமே சமூக மாற்றத்தை நிகழ்த்த முடியும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்” என அவர் தெரிவித்தார்.


மேலும் கூறுகையில், “அரசியலில் இருப்பவர்கள் அனைவரும் துன் அவர்களின் வாழ்வை ஒரு பாடமாகக் கொள்ள வேண்டும். நாம் பதவியில் இருக்கும் போது நம்மைப் புகழ்பவர்களை விட, நாம் இல்லாத காலத்திலும் மக்கள் நம்மைத் தேடி வந்து நினைவு கூர்வதே ஒரு தலைவனுக்கு கிடைக்கும் உண்மையான அங்கீகாரம். அதற்கு உதாரணமாக திகழ்பவர் துன் சாமிவேலு எனவும் புகழாரம் சூட்டினார். இந்த நிகழ்வில் அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி கல்வி, பொருளாதாரம், விளையாட்டு எனப் பல தரப்பு மக்களும் திரளாகக் கூடியிருப்பது, துன் அவர்கள் மக்கள் மனதில் எந்த அளவிற்கு ஆழமாக நீக்கமற நிறைந்திருக்கிறார் என்பதற்குச் சான்றாகும்” என்றார் சரவணன்.

​மலேசிய இந்திய சமூகத்தின் ‘அணையா தீபமாக’ திகழும் துன் சாமிவேலுவிற்கு டான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன், டத்தோஸ்ரீ சரவணன், டத்தோஸ்ரீ வேல்பாரி, டான்ஸ்ரீ அம்பிகப்பாகன் உட்பட ம.இ.கா-வின் முக்கியத் தலைவர்கள், உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் துன் சாமிவேலுவின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

ராமேஸ்வரி ராஜா
பி.மலையாண்டி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here