கோலாலம்பூர்:
பண்டார் புஞ்சாக் ஆலம் (Bandar Puncak Alam) பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை வடிகாலில் விழுந்து இழுத்துச் செல்லப்பட்ட 10 வயது சிறுவன், மூன்று நாட்களுக்குப் பிறகு இன்று சடலமாக மீட்கப்பட்டார்.
கைரில் இஸானி (Khairil Izani) என்ற அந்தச் சிறுவன், கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 3.30 மணியளவில் தனது நண்பர்களுடன் கால்பந்து விளையாடிக்கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக 3 மீட்டர் ஆழமுள்ள வடிகாலில் விழுந்துள்ளார். அப்போது பெய்த கனமழையால் அவர் நீரில் இழுத்துச் செல்லப்பட்டார்.
சிறுவனுடன் விளையாடிய நண்பர்கள் அதிர்ச்சியில் உறைந்துபோனதால், இந்தத் தகவலை உடனடியாக யாரிடமும் கூறவில்லை. சம்பவ நடந்து மூன்று மணி நேரம் கழித்து, மாலை 7 மணியளவிலேயே சிறுவனின் குடும்பத்தாருக்குத் தெரியவந்தது.
தகவல் கிடைத்ததும் பெஸ்தாரி ஜெயா தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். கடந்த மூன்று நாட்களாக மோப்ப நாய்கள் மற்றும் மூழ்காளர் குழுக்களின் உதவியுடன் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்றது.
இறுதியாக இன்று மதியம் சுமார் 1.00 மணியளவில், சிறுவன் விழுந்த இடத்திலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ள சுங்கை புலோ ஆற்றில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டதாக சிலாங்கூர் தீயணைப்புத் துறை உதவி இயக்குனர் அகமட் முக்லிஸ் முக்தார் உறுதிப்படுத்தினார்.
“சிறுவனின் உடல் மீட்கப்பட்டு, அடுத்தகட்ட நடவடிக்கைக்காக காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது,” என்று அவர் தெரிவித்தார்.
விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.




















