ஈரானுக்கு மாற்று அணி எது?

நியூயார்க்:

23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஜூன், ஜூலை மாதங்களில் அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் நடக்கிறது. இதில் கலந்து கொள்ளும் 48 அணிகளில் ஒன்றான ஈரான் ‘ஜி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. 1 பெல்ஜியம், எகிப்து, நியூசிலாந்து ஆகியவை அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும்.

‘ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுத்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. எங்களது உச்ச தலைவரை கொன்று இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் அங்கு நடக்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்க சாத்தியமில்லை’ என்று ஈரான் விளையாட்டுத்துறை மந்திரி அகமத் டோன்யமாலி அறிவித்தார்.

ஆனாலும் அவர்களை சமாதானப்படுத்தி போட்டியில் பங்கேற்க வைக்க முடியும் என சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) நம்புகிறது. ஈரான் இந்த போட்டியை புறக்கணித்தால் உலகக்கோப்பை கால்பந்தில் 1950-ம் ஆண்டுக்கு பிறகு முதல் புறக்கணிப்பு நிகழ்வாக இருக்கும்.

கடைசியாக 1950-ம் ஆண்டு பிரேசிலில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் ஆடும் வாய்ப்பை பெற்ற இந்தியா, பிரான்ஸ் போன்ற அணிகள் நிதி நெருக்கடி காரணமாக விலகி இருந்தன.

ஈரான் விலகினால் அந்த அணிக்கு பதிலாக யாருக்கு அதிர்ஷ்டம் அடிக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ‘பிபா’ தகுதி சுற்று விதிமுறைப்படி. ஆசிய மண்டலத்தில் அடுத்த சிறந்த தரவரிசை கொண்ட அணிக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். இதன்படி ஈராக் அணி தேர்வாகும்.

ஆனால் ஈராக் அணி ‘பிளே-ஆப்’ சுற்றில் விளையாட உள்ளது. இதில் வெற்றி பெற்றால் அந்த அணி நேரடியாக உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெற்று விடும். அப்படி ஒரு சூழல் உருவானால் அதற்கு அடுத்த இடத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வாய்ப்பு கிடைக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.



LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here