வில்ஜோயன் பவுன்சர் தாக்குதல் தலை தப்பினார் ஆந்த்ரே ரஸ்ஸல்

கிங்ஸ்டன்-கரீபியன் பிரிமியர் லீக் டி20 போட்டியில், ஜமைக்கா தல்லவாஸ் அணி வீரர் ஆந்த்ரே ரஸ்ஸல் பவுன்சர் பந்துவீச்சு ஹெல்மெட்டை பலமாகத் தாக்கியதில் காயம் அடைந்தார். ஜமைக்கா  செயின்ட் லூசியா அணிகள் மோதிய இப்போட்டி, சபினா பார்க் மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்தது.

இந்த போட்டியின்போது, செயின்ட் லூசியா வேகப் பந்துவீச்சாளர் ஹர்துஸ் வில்ஜோயன் (தென் ஆப்ரிக்கா) வீசிய பவுன்சரை சிக்சருக்கு தூக்க முயன்றார் ரஸ்ஸல். பந்து அவரது காது அருகே ஹெல்மெட்டை பலமாகத் தாக்கியதால் நிலைகுலைந்த அவர் களத்திலேயே சுருண்டு விழுந்தார். பின்னர் ஸ்ட்ரெச்சரில் வைத்து தூக்கிச் செல்லப்பட்ட அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஸ்கேன் பரிசோதனையில் பெரிய பாதிப்பு எதுவும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பிறகே அனைவரும் நிம்மதி அடைந்தனர்.

இந்த போட்டியில், டாஸ் வென்ற செயின்ட் லூசியா முதலில் பந்துவீசியது. ஜமைக்கா அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 170 ரன் குவித்தது. பிலிப்ஸ் 58, பாவெல் 44 ரன் விளாசினர். கிறிஸ் கேல் முதல் பந்திலேயே டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். ரஸ்ஸலும் ரன் ஏதும் எடுக்காத நிலையில் காயம் காரணமாக வெளியேறியது அந்த அணிக்கு பின்னடைவை கொடுத்தது. அடுத்து களமிறங்கிய செயின்ட் லூசியா 16.4 ஓவரிலேயே 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன் எடுத்து வென்றது. பிளெட்ச்சர் 47, ரகீம் கார்ன்வால் 75 ரன் (30 பந்து, 4 பவுண்டரி, 8 சிக்சர்), கிராண்ட்ஹோம் 25 ரன் விளாசினர். கார்ன்வால் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here