வாழ்வில் வளம் தரும் விநாயகர்

கணபதியை வணங்கி ஒரு செயலை செய்யத் தொடங்கினால், அச்செயல் வெற்றியாக முடியும். அதற்காகவே நாம் பிள்ளையார் சுழி போட்டு எழுதத் தொடங்குகிறோம். உலகில் முதன்முதலாக எழுத ஆரம்பித்தவரே விநாயகப் பெருமான்தான். வேத வியாசர் மகாபாரதத்தை சொல்லச்சொல்ல தன் தந்தத்தை உடைத்து எழுத்தாணியாக்கி எழுதியவர் பிள்ளையார்.
பிள்ளையார் முன் நின்று அவரை வணங்கி, தலையில் 3 முறை குட்டி, காதுகளைப் பிடித்தபடி தோப்புக் கரணம் போட்டு வணங்க வேண்டும். தோப்புக் கரணம் போடுவதற்கு ஒரு காரணமும் உண்டு. மகாவிஷ்ணுவின் ஸ்ரீ சக்கரத்தை பிடுங்கிக் கொண்டு அதை வாயில் போட்டுக் கொண்டார் விநாயகர். பலம் பொருந்திய விநாயகரிடம் இருந்த சக்கரத்தை மீட்க என்னன்னவோ முயன்றும் திருமாலுக்கு வெற்றி கிட்டவில்லை.
இறுதியில் மகாவிஷ்ணு தோப்புக் கரணம் போட, அதைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தார் விநாயகர். எதிர்பார்த்தது போலவே வாயில் இருந்த சக்கரம் வெளியே வந்து விழுந்தது. மகாவிஷ்ணு சக்கரத்தை எடுத்துக் கொண்டார். இதைப்போலவே நாமும் தோப்புக் கரணம் போட்டு வழிபட்டால் வேண்டிய வளங்களை விநாயகர் தருவார் என்பது நம்பிக்கை.
விநாயகர் வழிபாட்டில் அருகம்புல்லுக்கு தனி இடம் உண்டு. இதற்கும் ஒரு காரணம் உள்ளது. ஒருமுறை அனலாசுரன் என்ற அசுரனை விநாயகர் விழுங்கினார். வயிற்றுக்குள் சென்ற அனலாசுரன், மிக அதிகமாக அனலைக் கக்கினான். அந்த சூட்டைத் தணிக்க அருகம்புல்லை விழுங்கினார் விநாயகர். உடலுக்கு குளிர்ச்சி தரும் அருகம்புல், இதன் மூலம் விநாயகர் வழிபாட்டில் முக்கிய இடத்தைப் பெற்றது. பூவை விட, அருகம்புல் வைத்து பிள்ளையாரை வழிபடலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here