ஜார்ஜ் டவுன் | திங்கள், 23 மார்ச் 2026:
புக்கிட் மெர்தாஜாம் மருத்துவமனை ஒரு கோயிலுக்காக இடமாற்றம் செய்யப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்று அந்த மருத்துவமனையின் பார்வையாளர் வாரியம் (Board of Visitors) திட்டவட்டமாக மறுத்துள்ளது.
‘ஹம்லி ஹாதி’ (Hamly Hadi) என்ற ஃபேஸ்புக் பயனர், “ஸ்டீவன் சிம் சீ கியோங்கிற்கு (Steven Sim Chee Keong) இடையூறாக இருக்கக்கூடாது என்பதற்காக புக்கிட் மெர்தாஜாம் மருத்துவமனை இடமாற்றம் செய்யப்பட உள்ளது” என்று பதிவிட்டிருந்தார். இது இனவாதத்தைத் தூண்டும் வகையில் இருப்பதாக வாரியம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டை மறுத்து வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தத் தகவல் அவதூறானது மற்றும் தீய எண்ணத்துடன் பரப்பப்பட்டுள்ளது என்று அது தெளிவுபடுத்தியுள்ளது.
2025 செப்டம்பர் 14 அன்று புக்கிட் மெர்தாஜாம் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டீவன் சிம் மருத்துவமனைக்கு வந்தபோது, கோயில் தொடர்பான எந்தப் பிரச்சினையும் பேசப்படவில்லை. அவரது வருகை பொதுமக்களுக்கான மருத்துவ வசதிகளை மேம்படுத்துவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருந்தது.
மருத்துவமனையை இடமாற்றம் செய்யும் திட்டம் எதுவும் இல்லை. மாறாக, நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு கூடுதல் பிளாக் (Additional block) கட்டி மருத்துவமனையை விரிவுபடுத்தவே திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காகப் பினாங்கு மாநில அரசு 8 ஏக்கர் நிலத்தை வழங்கியுள்ளது. தற்போது இந்தத் திட்டம் சுகாதார அமைச்சின் (MOH) ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது.
இன மற்றும் மத உணர்வுகளைத் தூண்டி, சமூக அமைதியைக் குலைக்கும் வகையில் இத்தகைய வதந்திகளைப் பரப்புவோர் மீது அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாரியம் வலியுறுத்தியுள்ளது.
மேலும், இந்த மருத்துவமனை இனம், மதம் பாராமல் அனைத்து மக்களுக்கும் சேவை செய்து வருவதாகவும், அதன் வளர்ச்சித் திட்டங்கள் அனைத்தும் பொது சுகாதாரச் சேவையை வலுப்படுத்துவதற்காகவே என்றும் வாரியம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது




















