சவுதியில் உள்ள அமெரிக்க படைத்தளம் மீது ஈரான் அதிரடி தாக்குதல் – 10 வீரர்கள் படுகாயம்…

ரியாத்,அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் இணைந்து, கடந்த பிப்ரவரி 28-ந்தேதி ஈரான் மீது தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க படைத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

மேலும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இதனால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் கப்பல்களின் போக்குரத்து தடைபட்டது. இதன் விளைவாக பல்வேறு நாடுகளில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதற்கிடையில், ஈரான் மீதான தாக்குதல் ஏப்ரல் 6-ந்தேதி வரை நிறுத்தப்படுவதாக டிரம்ப் அறிவித்தார்.

அதோடு நேற்றைய தினம் அமெரிக்க அதிபர் டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசுகையில் ‘ஈரான் அழிக்கப்பட்டது’ என்று கூறினார். மேலும், அமெரிக்க பாதுகாப்பு துறை செயலாளர் பிட்டே ஹெக்சேத், “வரலாற்றில் இதுவரை இவ்வளவு வேகமாக ஒரு நாட்டின் ராணுவம் தோற்கடிக்கப்பட்டது இல்லை’ என்று குறிப்பிட்டார்.

இந்த நிலையில், சவுதி அரேபியாவில் உள்ள அமெரிக்க படைத்தளம் மீது ஈரான் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் டிரோன தாக்குதலில், படைத்தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல்வேறு ராணுவ விமானங்கள் சேதமடைந்ததாகவும், 10 வீரர்கள் படுகாயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதில் 2 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதே படைத்தளத்தில் ஏற்கனவே கடந்த மார்ச் 1-ந்தேதி ஈரான் தாக்குதல் நடத்தியிருந்தது. அந்த தாக்குதலில் ராணுவ சார்ஜென்ட் பெஞ்சமின் பென்னிங்டன்(வயது 26) படுகாயமடைந்தார். பின்னர் சில நாட்களில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here