பள்ளிகளில் ‘ஸ்ட்ராபெர்ரி குயிக் மிட்டாய்களில் ‘ போதைப்பொருளா?: வதந்திகளை நம்ப வேண்டாம் என காவல்துறை எச்சரிக்கை!

கோலாலம்பூர் | மார்ச் 29, 2026

மலேசியப் பள்ளிகளில் ‘ஸ்ட்ராபெர்ரி குயிக்’ (Strawberry Quick) எனப்படும் மிட்டாய் வடிவிலான போதைப்பொருள் மாணவர்களுக்கு விநியோகிக்கப்படுவதாகச் சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்திகள் முற்றிலும் ஆதாரமற்றவை எனப் புகிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை (NCID) தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போன்ற செயலிகளில், ஸ்ட்ராபெர்ரி சுவை கொண்ட மிட்டாய் வடிவில் போதைப்பொருள் மாணவர்களுக்கு வழங்கப்படுவதாகவும், அதனைச் சாப்பிட்டால் மாணவர்கள் போதைக்கு அடிமையாகி விடுவார்கள் என்றும் ஒரு செய்தி வைரலாகி வந்தது. இதே போன்ற வதந்திகள் கடந்த ஆண்டு தொடக்கத்திலும் பரவியது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு பிப்ரவரி 5-ஆம் தேதி முதல் நாடு தழுவிய அளவில் நடத்தப்பட்ட சோதனைகளில், இது போன்ற எந்தவொரு போதைப்பொருளும் பிடிபடவில்லை. அனைத்து மாநிலக் காவல்துறை தலைமையகங்கள் மற்றும் கல்வி அமைச்சகத்திடம் (KPM) சரிபார்த்ததில், இது போன்ற சம்பவங்கள் எங்கும் பதிவாகவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று, புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ ஹுசைன் உமர் கான் (Datuk Hussein Omar Khan) தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்தச் செய்திகள் பெற்றோர்களை எச்சரிக்கும் நோக்கத்தில் பகிரப்பட்டாலும், உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்புவது தேவையற்ற அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும் என டத்தோ ஹுசைன் தெரிவித்தார்.

மிட்டாய் அல்லது அறிமுகமில்லாத நபர்கள் தரும் பொருட்களை வாங்கும் போது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

சமூக வலைதளங்களில் வரும் தகவல்களைச் சரிபார்க்காமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என்று காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here