மிகப்பெரிய வாகன உற்பத்தி நகரமாகிறது தஞ்சோங் மாலிம்; $10 பில்லியனை முதலீடு செய்யும் சீனா

சீன கார் உற்பத்தி நிறுவனமான ‘கீலி’ மலேசியாவில் 10 பில்லியன் அமெரிக்க டாலரை முதலீடு செய்யவுள்ளது.

அத்தோடு பேராக் மாநிலத்தில் தஞ்சோங் மாலிமில் அமையவுள்ள வாகனத் தொழிற்பேட்டையால் இந்த வட்டாரம் மிகப்பெரிய வாகன நகரமாக மாறவுள்ளது என்று, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று (ஜூலை 18) கூறினார்.

நேற்று இரவு (திங்கட்கிழமை) அந்நிறுவனம் தனக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்த இந்த இலக்கு, மலேசியர்களுக்கு ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று கூறினார்.

“புரோத்தோனுடன் இணைந்து கார்களைத் தயாரிக்கும் கீலி, தஞ்சோங் மாலிமை இந்த வட்டாரத்தில் மிகப்பெரிய கார் தயாரிப்பு நகரமாக மாற்ற விரும்புவதாக எனக்கு 10 பக்க கடிதம் எழுதியுள்ளது. இது US$10 பில்லியன் அதாவது 40 பில்லியன் மலேசிய ரிங்கிட் முதலீட்டுடன் இத்திட்டம் தொடங்கும்,” என்று அன்வார் கூறினார்.

இதற்கிடையே, சவுதி அரேபிய அரசாங்கமும், அந்நாட்டின் எண்ணெய், எரிவாயு நிறுவனமான அரம்கோவும் மலேசியாவில் அதன் முதலீட்டிலும் செயல்பாட்டு விரிவாக்கத்தில் கவனம் செலுத்தும் என்றும் நிதி அமைச்சராகவும் இருக்கும் அன்வார் கூறினார்.

சீனா, சிங்கப்பூர், இந்தோனேசியாவுடன் ஒப்பிடும்போது 2023 முதல் காலாண்டில் மலேசியப் பொருளியல் 5.6 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளது பெருமைப்படத்தக்கது என்று அன்வார் குறிப்பிட்டார்.

இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 71 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள (அங்கீகரிக்கப்பட்ட) முதலீடுகளை நாடு வெற்றிகரமாக ஈர்த்துள்ளது. இதற்கு அரசியல் நிலைத்தன்மையும் ஓரளவு பங்களித்துள்ளது என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here