- ஐபிஎல் 2026 சீசனுக்காக தீவிரமாக தயாராகி வந்த மகேந்திரசிங் தோனிக்கு, பின்னங் காலில் தசை பிடிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், முதல் இரண்டு வாரங்களுக்கு தோனியால் விளையாட முடியாத நிலைமை இருக்கிறது. அதாவது, முதல் 5 போட்டிகளில் தோனி விளையாட மாட்டாராம்.தோனிக்கு மாற்று யார்? இந்நிலையில், மகேந்திரசிங் தோனிக்கு மாற்றாக மிடில் வரிசையில், சர்பரஸ் கானை சேர்க்க சிஎஸ்கே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. சர்பரஸ் கான், கடந்த சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில், 7 போட்டிகளில் விளையாடி, அதில் 65.80 சராசரி, 203.09 ஸ்ட்ரைக் ரேட்டில் 329 ரன்களை குவித்து அசத்தினார். இதில், ஒரு சதம், மூன்று அரை சதங்களும் அடங்கும்.
- இப்படி சர்பரஸ் கான் அபாரமாக செயல்பட்டதால்தான், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, இவர் மீது நம்பிக்கை ஏற்பட்டது. இருப்பினும், பிளேயிங் 11-ல் சர்பரஸ் கானின் இடம் உறுதியாகாமல் இருந்தது. காரணம், 14.2 கோடிக்கு வாங்கப்பட்ட மிடில் வரிசை வீரர் கார்த்திக் சர்மாவும் அணியில் இருப்பதால், சர்பரஸ் கானுக்கு பிளேயிங் 11-ல் இடம் கிடைப்பதில் சந்தேகம் இருந்தது. இந்நிலையில், முதல் சில போட்டிகளில் இருந்து தோனி விலகிவிட்டதால், அவருக்கு மாற்றாக சர்பரஸ் கான் விளையாடுவது உறுதியாகிவிட்டது.
தோனி எப்போது கம்பேக்: ஏப்ரல் 18ஆம் தேதி சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக தோனி களமிறங்குவார். இப்போட்டி, ஹைதராபாத்தில் இரவு 7:30 மணிக்கு துவங்கும்.
தோனி இல்லாத போட்டி: முதல் 5 போட்டிகளில் தோனி விளையாட முடியாத நிலைமை இருக்கிறது. மார்ச் 30ஆம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக, ஏப்ரல் 3ஆம் தேதி பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக, ஏப்ரல் 5ஆம் தேதி ஆர்சிபிக்கு எதிராக, ஏப்ரல் 11ஆம் தேதி டெல்லி கேபிடல்ஸுக்கு எதிராக, ஏப்ரல் 14ஆம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக தோனி இருக்க மாட்டார் எனக் கருதப்படுகிறது.
அதிரடி பேட்டிங் வரிசை: தற்போது இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் வரிசை அபாரமாக இருக்கிறது. பிரசாந்த் வீர் வரை அனைத்து பேட்டர்களும் அதிரடியாக விளையாட முடியும் என்பதால், இம்முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தொடர்ச்சியாக அபாரமாக செயல்பட்டு தொடர்ச்சியாக 180+ ரன்களை குவிக்க அதிக வாய்ப்புள்ளது.
கடந்த சீசனில்: ஐபிஎல் 2025 சீசனில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங், மிகமிக சுமாராக இருந்தது. பவர் பிளேவில் சராசரியாக 29 ரன்களைதான் சேர்த்தனர். மேலும், 180 ரன்களுக்கு மேல் அடிக்கப்பட்ட ஸ்கோரை சேஸ் செய்யவே முடியவில்லை. ஆனால், தற்போது அணியின் பேட்டிங் வரிசை அபாரமாக இருப்பதால், கடந்த சீசனைப் போல சொதப்பாமல் இம்முறை, சிஎஸ்கே தொடர்ச்சியாக மாஸ் காட்ட வாய்ப்புள்ளது.










