‘த்ரெட்ஸ்’ என்ற சமூக ஊடகத் தளத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு குறித்து தவறான தகவல்களைப் பரப்பியதாக சந்தேகிக்கப்படும் ஐந்து பேர் மீது மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் விசாரணையைத் தொடங்கியுள்ளது. ஒரு அறிக்கையில், ஐந்து சந்தேக நபர்களில் மூவர் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அழைக்கப்பட்டுள்ளதாக எம்சிஎம்சி தெரிவித்துள்ளது.
பெறப்பட்ட புகார்களின்படி, எரிபொருள் விலை உயர்வு குறித்து சந்தேக நபர்களால் பகிரப்பட்ட உள்ளடக்கம் தவறானது. தவறாக வழிநடத்துவது மற்றும் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தக்கூடியது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் சோதனைகளில், புல்லட்டின் டிவி3 (BuletinTV3) தனது காட்சிப் படங்களைப் பயன்படுத்தித் திருத்தப்பட்ட உள்ளடக்கத்தை வெளியிட்டதை மறுத்துள்ளது என்று MCMC கூறியது. பரவிய அந்தத் தவறான உள்ளடக்கம் ஒளிபரப்பு நிறுவனத்திடமிருந்து வரவில்லை என்றும், அது மூன்றாம் தரப்பினரால் உருவாக்கப்பட்டது என்றும் புல்லட்டின் டிவி3-இடமிருந்து MCMC ஒரு புகாரைப் பெற்றது என்றும் ஆணையம் கூறியது.
இந்த விசாரணை, 1998 ஆம் ஆண்டின் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் பிரிவு 233-இன் கீழ் நடத்தப்படுகிறது. இப்பிரிவின்படி, குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக RM500,000 அபராதம், இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். தவறான தகவல்களைப் பரப்புவதன் மூலம் பொதுமக்களைத் தவறாக வழிநடத்தும் நோக்கில் சமூக ஊடகத் தளங்களைத் தவறாகப் பயன்படுத்துவதை எம்சிஎம்சி தீவிரமாகக் கருதுகிறது என்று ஆணையம் கூறியது.
மத்திய கிழக்கில் நடக்கும் போரின் காரணமாக எரிசக்தி விலைகள் அதிகரித்துள்ள நிலையில், எரிபொருள் மற்றும் மின்சார விலைகள் தொடர்பான போலிச் செய்திகள் பரவுவதற்கு எதிராக அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுப்பார்கள் என்று பிரதமர் அன்வர் இப்ராஹிம் நேற்று எச்சரித்தார். ஃபேஸ்புக், த்ரெட்ஸ் மற்றும் வாட்ஸ்அப்பில் பரப்பப்பட்டதாகவும் எம்சிஎம்சி கூறியது. இந்த மாதம் மின்சாரக் கட்டணங்கள் உயரும் என்று இணையத்தில் பரவி வரும் கூற்றுகளையும் தெனாகா நேஷனல் பெர்ஹாட் மறுத்துள்ளது.









