தமிழக பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: அண்ணாமலைக்கு இடமில்லை! தமிழிசை, எல். முருகன் போட்டி – மேலிடம் அதிரடி

சென்னை | ஏப்ரல் 3, 2026

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சி, தான் போட்டியிடும் 27 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

இந்த வேட்பாளர் பட்டியலில் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பெயர் இடம்பெறவில்லை.

பட்டியல் தயாரிப்பின் போது அண்ணாமலை போட்டியிடும் தொகுதி குறித்து நீண்ட இழுபறி நீடித்ததாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது அவர் போட்டியிடவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

தனக்கு விருப்பமான தொகுதி ஒதுக்கப்படாததால் அண்ணாமலை அதிருப்தியில் இருப்பதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. இருப்பினும், வேட்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள அவர், கூட்டணி வெற்றி பெறத் தோளோடு தோள் நின்று பிரசாரம் செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.

முக்கிய வேட்பாளர்கள் மற்றும் தொகுதிகள்

பாஜகவின் முக்கியத் தலைவர்கள் களமிறக்கப்பட்டுள்ள விவரம் வருமாறு:

  • நயினார் நாகேந்திரன்: சாத்தூர்

  • தமிழிசை சௌந்தரராஜன்: மயிலாப்பூர்

  • வானதி சீனிவாசன்: கோவை வடக்கு

  • எல். முருகன்: அவினாசி

  • விஜயதாரணி: விளவங்கோடு (காங்கிரஸில் இருந்து விலகி இணைந்தவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது)

  • எம்.ஆர். காந்தி: நாகர்கோவில்

  • கிருத்திகா சிவக்குமார்: மொடக்குறிச்சி (தற்போதைய எம்.எல்.ஏ சரஸ்வதியின் மருமகள்)

இந்தத் தேர்தலில் 27 தொகுதிகளில் ஐந்து பெண் வேட்பாளர்களுக்கு பாஜக வாய்ப்பளித்துள்ளது. வேட்பாளர் பட்டியலில் சுமார் 8 முதல் 10 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதினாலும், அந்த வெற்றி அதிமுகவின் முழுமையான ஒத்துழைப்பைப் பொறுத்தே அமையும் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இரண்டு நாள் சுற்றுப்பயணமாகத் தமிழகம் வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, சனிக்கிழமை சென்னையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை கட்டாயம் பங்கேற்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, கேரளாவில் இருந்த அண்ணாமலை அவசரமாகச் சென்னைக்கு விரைந்துள்ளார். பிரதமருடனான இந்தச் சந்திப்பு அண்ணாமலையின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த திங்கட்கிழமை வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், மனு தாக்கல் செய்ய ஏப்ரல் 6-ஆம் தேதி கடைசி நாளாகும். மற்ற கட்சிகள் ஏற்கனவே பிரசாரத்தைத் தொடங்கிவிட்ட நிலையில், பாஜக தற்போது தனது தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here