உக்ரைன் குடியிருப்புகள் மீது ரஷ்யா தாக்குதல்; 18 பேர் பலி

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரில், குடியிருப்புகளை குறிவைத்து நிகழ்த்தப்பட்ட மோசமான ஏவுகணைத் தாக்குதலில் 18 குடிமக்கள் பலியானதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

உக்ரைனின் இரு பெரிய நகரங்களின் குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து ரஷ்யா நடத்திய தாக்குதலில், 18 பேர் கொல்லப்பட்டதாகவும், 130க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும், நகரங்களின் சாமானியர்கள் வசிக்கும் வீடுகள் மற்றும் உள்கட்டமைப்புகளை தகர்க்கப்பட்டுள்ளதாகவும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். கார்கிவ், கீவ் ஆகிய நகரங்களின் பொதுமக்கள் குடியிருப்புகளை குறிவைத்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.

உக்ரைன் குடிமக்கள் மீதான தாக்குதலை மறுத்திருக்கும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம், ஏவுகணைகள் மற்றும் வெடிமருந்துகள் தயாரிக்கும் நிறுவனங்களையே தாக்கியதாக தெரிவித்துள்ளது. ’ரஷ்யா தனது ஏவுகணைத் தாக்குதல்களை மேலும் முடுக்க வேண்டும்’ என பாதுகாப்பு அமைச்சர் ருஸ்டெம் உமெரோவ், அண்மையில் ரஷ்ய ராணுவ உயரதிகாரிகள் மத்தியில் பேசும்போது வலியுறுத்தியதை அடுத்து உக்ரைன் மீதான ஏவுகணைகள் அதிகரித்துள்ளன.

இந்த பிப்ரவரி மாதத்தோடு உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 2 வருடங்களை நிறைவு செய்ய இருக்கிறது. சர்வதேச அளவில் ரஷ்யாவை அரசியல், ராஜதந்திர, பொருளாதர மற்றும் வணிக வகைகளில், இந்த போர் நடவடிக்கை பாதித்து வருகிறது. உள்நாட்டிலும் குடிமக்கள் மத்தியிலிருந்து கணிசமான அதிருப்தியை அதிபர் புதின் சம்பாதித்து வருகிறார். எனவே இந்த போரினை முடிவுக்கு கொண்டுவரும் உத்தேசத்தில், போர் நெறிமுறைகளை மீறி குடிமக்கள் மீதும் தாக்குதல் நடத்தவும் ரஷ்யா துணிந்துள்ளது.

இதன்பொருட்டு வழக்கமான ராணுவ அணிகளுக்கு அப்பால் அதிக எண்ணிக்கையிலான கூலிப்படைகள், பிற நாடுகளை சேர்ந்த முன்னாள் ராணுவத்தினரை போரில் ஈடுபடுத்தி வருகிறது. இதன் மூலம் ரஷ்யா மீது போர்க்குற்றத்துக்கு எதிரான சர்வதேச நடவடிக்கைகள் பாய்ந்தாலும் அதிலிருந்து தப்புவது புதினுக்கு சாத்தியமாகும். எனவே கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 600-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் 1,000-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ரஷ்ய ராணுவம் களமிறக்கி உள்ளது. இவை சாமானிய குடிமக்களை அச்சுறுத்துவதன் மூலம், உக்ரைனில் அசாதாரண சூழலை உருவாக்கவும், பதற்ற சூழலை தோல்வி முகமாக திருப்பவும் ரஷ்யா முயன்று வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here