காஜாங் | ஏப்ரல் 7, 2026
சலவை நிலையம் ஒன்றில் பூனைக்குட்டியை மிகக் கொடூரமான முறையில் சித்திரவதை செய்த 49 வயது வேலையற்ற ஆடவருக்கு, காஜாங் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று 6 மாதச் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.
சலவை நிலையம் ஒன்றிற்குள் புகுந்த தோ தெக் ஹூய் என்ற அந்த நபர், அங்கிருந்த ஒரு சிறிய கருப்பு நிறப் பூனைக்குட்டியைத் தரையிலும் சுவரிலும் ஓங்கி வீசிச் சித்திரவதை செய்துள்ளார். இந்தக் கொடூரச் செயலை அவரே வீடியோ எடுத்துச் சமூக வலைதளங்களிலும் பதிவேற்றியிருந்தார். இந்த வீடியோ வைரலாகி பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இச்சம்பவம் கடந்த ஏப்ரல் 2-ஆம் தேதி அதிகாலை வேளையில் நிகழ்ந்துள்ளது.
விலங்குகள் நலச் சட்டத்தின் கீழ் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தோ தெக் ஹூய், தன் மீதான குற்றச்சாட்டுகளை எவ்வித மறுப்புமின்றி ஒப்புக்கொண்டார்.
வஹ்ஸ்க்கை விசாரித்த நீதிபதி அவருக்கு 60,000 ரிங்கிட் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
வேலையற்றவரான தம்மால் அவ்வளவு பெரிய தொகையைச் செலுத்த இயலாது எனக் கூறி அவர் நீதிமன்றத்திலேயே கதறி அழுதார்.
அபராதத்தைச் செலுத்தத் தவறியதால், அதற்குப் பதிலாக 6 மாதச் சிறைத் தண்டனையை அனுபவிக்குமாறு நீதிபதி அவருக்குத் தீர்ப்பளித்தார்.
























