இலங்கை மக்களுக்கு $320 மில்லியன் டாலர் நிவாரணம் ! மீனவர்கள், விவசாயிகளுக்கு நேரடி ரொக்க உதவி – அதிபர் அநுர குமார திசாநாயக்க அதிரடி

கொழும்பு | ஏப்ரல் 8, 2026

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழலால் கடுமையாக உயர்ந்துள்ள வாழ்க்கைச் செலவினங்களைக் கருத்தில் கொண்டு, இலங்கை மக்களுக்கு 320 மில்லியன் டாலர் (சுமார் 9,600 கோடி இலங்கை ரூபாய்) மதிப்பிலான பிரம்மாண்ட நிவாரணத் தொகுப்புத் திட்டத்தை அதிபர் அநுர குமார திசாநாயக்க அறிவித்துள்ளார்.

இந்தத் திட்டத்தின் மூலம் இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 25 விழுக்காட்டினர் நேரடியாகப் பயனடைவார்கள். குறிப்பாக:

ஆயிரக்கணக்கான மீனவர்களுக்கு நேரடி ரொக்க உதவி வழங்கப்படவுள்ளது. அதேநேரம்  அரிசி மற்றும் தேயிலை பயிரிடும் விவசாயிகளுக்கு நிதி உதவி மற்றும் உர மானியம் கிடைக்கும்.

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு இந்த நிவாரணம் கைகொடுக்கும்.

சிங்கள மற்றும் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, வசதி குறைந்த குடும்பங்களுக்கு இந்த மாதம் கூடுதலாக $25 டாலர் (சுமார் 7,500 ரூபாய்) சிறப்பு உதவியாக வழங்கப்படவுள்ளது.

போரினால் மின்சாரக் கட்டணம் 40% வரை உயர்ந்துள்ள நிலையில், சாமானிய மக்களுக்கு அதில் கணிசமான மானியம் வழங்கப்படவுள்ளது.

உர மானியம்: யூரியா உரத்திற்கான செலவில் 30 விழுக்காட்டை அரசாங்கமே ஏற்கும் என விவசாயிகளுக்கு அதிபர் உறுதி அளித்துள்ளார்.

எரிபொருள் விலைகள் மூன்றில் ஒரு பங்கு (33%) உயர்ந்துள்ளதால், போக்குவரத்து மற்றும் மீன்பிடித் துறையினருக்கு விசேட சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த நிவாரணங்களுக்கான நிதி தற்போதுள்ள வரவுசெலவுத் திட்டத்தின் (Budget) மூலமே ஒதுக்கப்படுவதாக அதிபர் குறிப்பிட்டுள்ளார். மேலும், அனைத்துலகப் பண நிதியத்திடமிருந்து (IMF) அடுத்த தவணையாக $700 மில்லியன் டாலர் நிதி விரைவில் கிடைக்கவுள்ளதால், நாட்டின் பொருளாதாரம் நிலையான பாதையில் செல்லும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மத்திய கிழக்குப் போர் தொடங்கியதிலிருந்து சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததால், இலங்கையில் எரிபொருள் விலை 33% வரையிலும், மின்சாரக் கட்டணம் 40% வரையிலும் உயர்த்தப்பட்டது. இந்தப் பொருளாதாரச் சுமையைத் தணிக்கவே இந்த அதிரடி நிவாரணத் திட்டங்களை அரசு தற்போது முன்னெடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here