சேலம், ஏப்ரல் 13:
சேலம் மேற்குத் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த பாமக நிறுவனர் ராமதாஸ், மேடையில் திடீரென மயங்கி விழுந்த சம்பவம் அவரது ஆதரவாளர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உட்கட்சிப் பூசல் காரணமாகப் பாமகவில் ஏற்பட்டுள்ள பிளவைத் தொடர்ந்து, அன்புமணி தலைமையிலான ஒரு பிரிவு அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளது. மறுபுறம், ராமதாஸ் தனிப்பாதையில் சசிகலாவின் புதிய கட்சியுடன் கூட்டணி அமைத்துத் தேர்தலை எதிர்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், நேற்று (ஏப்ரல் 12) சேலம் மேற்குத் தொகுதிக்கு உட்பட்ட பள்ளப்பட்டி பகுதியில் ராமதாஸ் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். தீவிரமாகப் பிரசாரப் பேச்சை முடித்த கையோடு, திடீரென அவருக்கு மயக்கம் ஏற்பட்டது.
மேடையில் அவர் மயங்கி விழுந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள், பதறியடித்தபடி அவரை உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தற்போது அவர் மருத்துவர்களின் தீவிரக் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது உடல்நிலை குறித்த கூடுதல் தகவல்கள் வெளியாகாத நிலையில், அவர் மீண்டும் தேர்தல் பிரசாரத்தைத் தொடருவாரா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. அவரது திடீர் உடல்நலக் குறைவால் தொண்டர்கள் மிகுந்த கவலையில் உள்ளனர்.





















