கோலாலம்பூர், ஏப்ரல் 14:
பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும், அதிகரித்து வரும் எரிபொருள் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள பயணிகளுக்கு உதவும் வகையிலும், கே.டி.எம்.பி (KTMB) ரயில்களில் 30% கட்டணத் தள்ளுபடியை அரசு அறிவித்துள்ளது.
நாளை ஏப்ரல் 15 முதல் அக்டோபர் 14, 2026 வரை பயணம் செய்யலாம் என்றும், இவை திங்கள் முதல் வியாழன் வரையான வார நாட்களில் செல்லுபடியாகும் என்றும் போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ அந்தோணி லோக் இன்று நடந்த ஓர் செய்தியாளர் சந்திப்பில் இதனை அறிவித்தார்.
அனைத்து மின்சார ரயில் சேவை (ETS) பிரிவுகள் மற்றும் ஜொகூர் பாரு – தும்பாட் (JB Sentral – Tumpat) இடையே இயங்கும் எக்ஸ்பிரஸ் ரக்யாத் திமுரான் (ERT) சேவைக்கும் இத்தள்ளுபடி பொருந்தும் என்றும் சொன்னார்.
பயணிகள் ஏப்ரல் 15 முதல் ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் தங்களின் பயணங்களை முன்பதிவு செய்ய வேண்டும். இதற்கான பிரத்யேக ‘புரோமோ கோட்’ (Promo Code) விவரங்களை கே.டி.எம்.பி தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடும்.
மேலும் பள்ளி விடுமுறை நாட்கள் மற்றும் பொது விடுமுறை நாட்களில் இந்தத் தள்ளுபடி பொருந்தாது. வணிக வகுப்பு (Business Class), எக்ஸ்பிரஸ் ரக்யாத் திமுரான் முதல் வகுப்பு மற்றும் ஸ்லீப்பர் வகுப்பு பயணிகளுக்கு இத்தள்ளுபடி கிடையாது.
அத்தோடு ஏற்கனவே 50% சலுகை பெறும் முதியவர்கள், மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்ற சிறப்புச் சலுகை அட்டைதாரர்களுக்கு இந்த புதிய 30% தள்ளுபடி பொருந்தாது என்று அவர் கூறினார்,
தற்போது வார நாட்களில் ரயில்களில் சுமார் மூன்றில் ஒரு பங்கு இருக்கைகள் காலியாக இருப்பதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த இருக்கைகளைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதன் மூலம், பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தவும், நாட்டின் எரிபொருள் நுகர்வைக் குறைக்கவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக, கிள்ளான் பள்ளத்தாக்கிலிருந்து ஜொகூர் மாநிலத்தின் செகாமாட், லாபிஸ் மற்றும் குளுவாங் போன்ற இரண்டாம் நிலை நகரங்களுக்கான போக்குவரத்து வசதியை மேம்படுத்த இது உதவும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
பயணிகள் தங்களின் பயணங்களை முன்கூட்டியே திட்டமிட்டு, கே.டி.எம்.பி இணையதளம் (www.ktmb.com.my) அல்லது கே.ஐ.டி.எஸ் (KITS) செயலி மூலம் டிக்கெட்டுகளைப் பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.





















