புதுடெல்லி, நாடாளுமன்றத்தின் 3 நாள் சிறப்பு கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. இந்த சிறப்பு கூட்டத்தொடரில், மகளிர் இடஒதுக்கீடு சீர்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு, அதில் 2 பெரிய சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதுடன், அரசியலமைப்பு சட்டம் 131-வது திருத்த மசோதா-2026, தொகுதிகள் மறுவரையறை மசோதா-2026 மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டங்கள் திருத்த மசோதா-2026 ஆகிய 3 மசோதாக்கள் இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடத்தப்பட்டது.
மகளிருக்கான இட ஒதுக்கீடு அமலாக்கத்திற்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மத்திய அரசு அவசர அவசரமாக மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுவரையறையையும், காலாவதியான 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பையும் அடிப்படையாகக் கொண்டு நியாயமற்ற அரசியல் ஆதாயம் தேடுகிறது என்று அவர்கள் விமர்சித்தனர்.
‘இந்தியா’ கூட்டணியில் உள்ள கட்சிகள் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை ஆதரித்தாலும், தற்போதைய இந்தச் சட்ட முன்னெடுப்பு, மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாட்டில் வரவிருக்கும் தேர்தல்களில் ஆதிக்கம் செலுத்தும் நோக்கில் மத்திய பா.ஜ.க. அரசால் மேற்கொள்ளப்படும் ஒரு ‘தேர்தல் தந்திரம்’ என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கூறுகின்றனர்.








