‘மடியில் அமர்ந்து பேருந்து ஓட்டிய’ விவகாரம்: ஓட்டுநருக்கு ஓராண்டு, காதலிக்கு 6 மாதங்கள் சிறைத்தண்டனை – நீதிமன்றம் அதிரடி!

கோலாலம்பூர்:

ஓடும் பேருந்தில் தனது காதலியை மடியில் அமரவைத்து ஸ்டியரிங்கைப் பிடிக்கவிட்ட விவகாரத்தில், சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மற்றும் அவரது காதலிக்கு முறையே ஒரு ஆண்டு மற்றும் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து ஜாசின் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

கடந்த வாரம் வட-தெற்கு நெடுஞ்சாலையில் (North-South Expressway) பெம்பான் ஓய்விடத்திற்கு அருகே, பேருந்தை ஆபத்தான முறையில் இயக்கியதற்காக ஆரிஃப் ஃபாமி அப்துல் சலாம் (36) மற்றும் அவரது காதலி நூர் அதிலா நஜ்வா (21) ஆகியோர் மீது வழக்குத் தொடரப்பட்டது. சமூக வலைதளங்களில் வைரலான இந்தக் காணொளி, பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

நீதிபதி மசானா சினி முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இருவரும் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்.

ஓட்டுநர் ஆரிஃப் ஃபாமிக்கு ஓராண்டு சிறைத்தண்டனையும், நூர் அதிலா நஜ்வாவுக்கு 6 மாதங்கள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.

இருவருக்கும் தலா 5,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால், கூடுதலாக இரண்டு மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும். இவர்கள் இருவரும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு வாகன ஓட்டுநர் உரிமம் பெறத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், நூர் அதிலா நஜ்வா மீது சுமத்தப்பட்ட பொது அமைதிக்கு இடையூறு விளைவித்த குற்றத்திற்காக, அவருக்குத் தனியாக 100 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது.

அரசுத் தரப்பு வழக்கறிஞர் தனது வாதத்தில், “அந்தப் பேருந்தில் 27 பயணிகள் பயணம் செய்தனர். ஓட்டுநரின் பொறுப்பற்ற செயலால் 27 உயிர்கள் ஆபத்தில் இருந்தன. பொதுப் போக்குவரத்துப் பாதுகாப்பிற்கு இழைக்கப்பட்ட அவமதிப்பு இது,” என்று வாதிட்டார்.

இதனைத் தொடர்ந்து தீர்ப்பளித்த நீதிபதி மசானா, “எந்த விபத்தும் நிகழவில்லை என்பது அதிர்ஷ்டம். ஆனால், பயணிகளின் பாதுகாப்பை முற்றிலுமாக அலட்சியம் செய்த இந்தச் செயல், சமூகத்திற்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்,” என்று கண்டிப்புடன் தெரிவித்தார்.

தண்டனை பெற்ற இருவரும், தங்கள் தவறுக்காக வருத்தம் தெரிவித்ததோடு, இதுவே முதல் குற்றம் என்று கருதித் தண்டனையைக் குறைக்கக் கோரினர். ஓட்டுநரின் ஓட்டுநர் உரிமம் கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதியே காலாவதியாகிவிட்டது என்பது விசாரணையில் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here