கேபிள் திருடிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற நான்கு திருடர்கள் ; 20 கி.மீ தூரம் விடாமல் துரத்தி கைது செய்த போலீஸ்

கோலாலம்பூர்:

கேபிள் திருட்டில் ஈடுபட்டுவிட்டு தப்பிச் செல்ல முயன்ற நான்கு உள்ளூர் நபர்களை 20 கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்று போலீசார் கைது செய்தனர். அதிவேகமாகத் துரத்திச் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் பொதுமகன் ஒருவரும் காயமடைந்துள்ளார்.

இன்று அதிகாலை 3.19 மணியளவில், லெிடோ (Lido) பகுதியில் உள்ள மெர்டேக்கா சூப்பர் மார்க்கெட் அருகே கேபிள் திருடப்படுவதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்ததைக் கண்ட திருடர்கள், தங்களது நான்கு சக்கர வாகனத்தில் (4WD) துவாரான் (Tuaran) நோக்கி மின்னல் வேகத்தில் தப்பினர்.

சுமார் 20 கி.மீ தூரம் நீடித்த இந்தத் துரத்தலின் போது, திருடர்கள் போக்குவரத்து விதிகளுக்கு மாறாக (எதிர் திசையில்) வாகனம் ஓட்டியதுடன், போலீஸ் வாகனத்தை இடித்துத் தள்ளவும் பலமுறை முயன்றனர்.

தப்பிக்கும் முயற்சியில், அவர்கள் 61 வயது நபர் ஒருவர் ஓட்டி வந்த மற்றொரு நான்கு சக்கர வாகனத்தின் மீது பலமாக மோதினர். இதில் அந்த ஓட்டுநர் இடிபாடுகளுக்குள் சிக்கி காயமடைந்தார்.

விபத்தைத் தொடர்ந்து 28 முதல் 43 வயதுடைய நான்கு நபர்களைப் போலீசார் கைது செய்தனர். அவர்களின் வாகனத்திலிருந்து கேபிள் வெட்டும் கருவிகள் (Cutters), செயின் பிளாக் (Chain block), மாற்றியமைக்கப்பட்ட இரும்பு கம்பிகள், திருடப்பட்ட கேபிள் சுருள்கள் ஆகியன கைப்பற்றப்பட்டன.

“இந்தத் துரத்தலின் போது தப்பியோடிய ஐந்தாவது சந்தேக நபரை நாங்கள் தீவிரமாகத் தேடி வருகிறோம். பிடிபட்டவர்கள் மீது கொலை முயற்சி (பிரிவு 307) மற்றும் தகவல் தொடர்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் விசாரணை நடத்தப்படுகிறது” என்று, கோத்தா கினபாலு நகர போலீஸ் தலைமை அதிகாரி எஸ்.பி. சையத் லாட் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here