சிக்:
சிக்கில் நேற்று மாலை நடைபெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில், 11 வயது சிறுவன் ஒருவன் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தான்.
நேற்று மாலை சுமார் 6:30 மணியளவில் ஜாலான் கம்பங் பெத்தோங் (Jalan Kampung Betong) பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. ஐந்தாம் வகுப்பு படிக்கும் அந்தச் சிறுவன், ஹோண்டா C100 ரக மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றுள்ளான்.
கம்போங் கோலா கெரிக்கிலிருந்து கம்பங் பெத்தோங் நோக்கிச் சென்றபோது, சிறுவனின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள், முன்னால் சென்ற மற்றொரு மோட்டார் சைக்கிளின் பின்புறத்தில் பலமாக மோதியது. முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளை 13 வயது சிறுவன் ஓட்டிச் சென்றுள்ளான்.
இந்த விபத்தில் 11 வயது சிறுவனுக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் உடனடியாக சிக் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும், இரவு 8:45 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
மற்றைய 13 வயது சிறுவன் லேசான காயங்களுடன் உயிர் தப்பினான்.
சிக் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஷம்சுரி சமான் கூறுகையில், “சிறுவன் தனது மோட்டார் சைக்கிளைக் கட்டுப்படுத்தத் தவறியதே இந்த விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கு சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987, பிரிவு 41(1)-ன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது” என்றார்.





















