News by K. Anbarasan
சிமிலிங்,
ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 726 மாணவர்களுக்கு கல்விக் காசோலைகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில், பல்கலைக்கழகத்தின் வேந்தரும், மலேசிய இந்தியக் கட்சி (மஇகா) தேசியத் தலைவருமான டான்ஶ்ரீ டத்தோ டாக்டர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன் அவர்கள் மாணவர்களுக்கு காசோலைகளை வழங்கினார்.
மொத்தமாக ரிங்கிட் மலேசியா 1.8 கோடி கல்விக் காசோலையாக மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இதில், ரிங்கிட் 1.6 கோடி மலேசிய இந்தியக் கல்வி அறக்கட்டளை (MIT) மூலம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

இந்த உதவித் தொகைகளை பெற்றவர்களில், 168 பேர் மருத்துவம், 78 பேர் பல் மருத்துவம், 81 பேர் மருந்தியல், 33 பேர் உடலியல் சிகிச்சை, 20 பேர் உயிரி மருத்துவம், 152 பேர் பிற பட்டப்படிப்புகள் மற்றும் 194 பேர் அடித்தள கல்வி (foundation) பயிலும் மாணவர்கள் ஆவார்கள். இவர்களுக்கு தனியாக ரிங்கிட் 20 லட்சம் கல்வி உதவித் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
1984 ஆம் ஆண்டு எம்ஐடி அமைப்பு தொடங்கப்பட்டதிலிருந்து, இதுவரை 14,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி உதவித் தொகைகளையும் கல்விக் கடன்களையும் பெற்றுள்ளனர். இதற்காக மொத்தமாக ரிங்கிட் 216 கோடி வரை வழங்கப்பட்டுள்ளதாக டாக்டர் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.








