தமிழக அரசியலில் டுவிஸ்ட்.. இபிஎஸ்-ஐ முதல்வராக்க உரிமை கோரல்.. ஆளுனரை சந்தித்து டிடிவி தினகரன் கடிதம்! …

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 தொகுதிகளை வென்றது. தேர்தலுக்கு பின் திமுக கூட்டணியில் இருந்த 5 இடங்கள் கொண்ட காங்கிரஸ் தவெகவவுக்கு தாவியது.

மேலும் தவெகவின் தொடர் முயற்சியால் திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இன்று தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தது. இருப்பினும் தவெக ஆட்சி அமைக்க இன்னும் பெரும்பான்மை இல்லை.

விசிக ஆதரவு அளிப்பதாக கூறப்பட்டாலும் கடிதம் இன்னும் வழங்கவில்லை என்பதால் இழுபறி நீடிக்கிறது. மேலும் திமுக கூட்டணியில் இடம்பெற்ற 2 இடங்கள் கொண்ட ஐயுஎம்எல் கட்சி தவெகவுக்கு ஆதரவு இல்லை என தெரிவித்துள்ளது.

விசிக கடிதமே தற்போது முக்கியமாக உள்ள நிலையில் அதன் தலைவர் திருமாவளவன் திமுக தலைவர் ஸ்டாலின் உடன் நேரில் சந்தித்து ஆலோசித்து வருகிறார்.

இந்த சூழலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற அமமுக கட்சி தலைவர் டிடிவி தினகரன் ஆளுநர் அர்லேகரை நேரில் சென்று சந்தித்துள்ளார்.

இந்த தேர்தலில் அமமுக ஒரு இடத்தில் வென்றுள்ளது. மன்னார்குடி தொகுதியில் வெற்றி பெற்ற அமமுக வேட்பாளர் எஸ் காமராஜ் ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தை எடுத்து சென்று டிடிவி தினகரன் ஆளுநரிடம் வழங்கியுள்ளார்.

அந்த கடிதத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் ஆக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி 53 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

தவெக குதிரை பேரத்தை தவிர்க்க அதிமுக வெற்றி வேட்பாளர்கள் புதுச்சேரி ரிசார்ட்டில் தங்கவைக்கப்பட்டு மீண்டும் இன்று மாலை சென்னை திரும்ப உத்தரவிடப்பட்ட நிலையில் தற்போது அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்க கடிதம் வழங்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக இன்று மாலை விஜய் மூன்றாவது முறையாக ஆளுனரை சந்தித்து ஆட்சி அமைக்க மீண்டும் உரிமை கோரினார். ஆனால் ஆளுநர் மாளிகை இதுகுறித்து இன்னும் எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here