கோலாலம்பூர்:
சமூக நலத்துறையின் மறுவாழ்வு மையத்தில் தங்கியிருந்த இரண்டு பதின்ம வயது சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 57 வயது துப்புரவுத் தொழிலாளி இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
நூர் அஸ்லான் மாட் நாயன் (Noor Azlan Mat Nayan) என்ற அந்த நபர் மீது சுமத்தப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளையும் நீதிபதி சுல்ஹாஸ்மி அப்துல்லா முன்னிலையில் வாசித்துக் காட்டப்பட்டபோது அவர் அதனை ஒப்புக்கொண்டார்.
முதல் குற்றச்சாட்டில், கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி காலை 11 மணியளவில், செபெராங் பிறை உத்தாரா (Seberang Prai Utara) நிறுவனத்தில் உள்ள தொழிற்பயிற்சி பட்டறைக்கு அருகிலுள்ள கழிப்பறையில் 14 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது.
இரண்டாவது ஏப்ரல் மாத தொடக்கத்தில் காலை 9 மணியளவில், அதே இடத்தில் 16 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது.
இந்த இரண்டு குற்றச்சாட்டுகளும் 2017-ஆம் ஆண்டு சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டத்தின் பிரிவு 14(b)-ன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. இக்குற்றத்திற்கு அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் பிரம்படி வழங்கப்பட வாய்ப்புள்ளது.
அரசுத் தரப்பு வழக்கறிஞர் வான் அமிரா ருசைனி, இந்தக் குற்றங்களின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு குற்றம் சாட்டப்பட்டவருக்கு பிணை வழங்கக்கூடாது என்று கோரினார். தனது குடும்பத்தினர் வெகு தொலைவில் வசிப்பதாகக் கூறி, அந்த நபர் பிணை கோரி விண்ணப்பிக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து, வழக்கின் பின்னணி விவரங்களைச் சமர்ப்பிக்கவும் தண்டனை விவரங்களை அறிவிக்கவும் நீதிபதி ஜூன் 24-ஆம் தேதியை நிர்ணயித்துள்ளார்.





















