த.வெ.க.வுக்கு ஆதரவு தெரிவித்தவர்களின் கட்சி பதவிகள் பறிப்பு – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை, தமிழக சட்டமன்றத்தில் த.வெ.க. அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. முதல்-அமைச்சர் விஜய் கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானம் மீதான விவாதத்திற்கு பிறகு வாக்கெடுப்பு தொடங்கியது. வாக்கெடுப்பின் போது திமுக எம்.எல்.ஏ.க்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

தீர்மானத்திற்கு ஆதரவாக 144 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர். 22 எம்.எல்.ஏ.க்கள் எதிராக வாக்களித்தனர். 5 எம்.எல்.ஏ.க்கள் நடுநிலை வகித்தனர். இதையடுத்து தீர்மானம் வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார். 144 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை தக்க வைத்தது.

இதற்கிடையில், அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாக அக்கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் சிலர், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவை மீறி த.வெ.க.வுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இந்த நிலையில், த.வெ.க.வுக்கு ஆதரவு தெரிவித்தவர்களை கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கம் செய்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், ஆர்.காமராஜ், சி.விஜயபாஸ்கர், பி.தங்கமணி, கே.பி.அன்பழகன், பா.பென்ஜமின், உடுமலை ராதாகிருஷ்ணன், எஸ்.டி.கே.ஜக்கையன், இசக்கி சுப்பையா உள்ளிட்டோரின் கட்சி பதவிகள் பறிக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அவர்கள் கட்சி பொறுப்புகளில் இருந்து மட்டும் நீக்கப்பட்டுள்ளனர் என்பதும், கட்சியில் இருந்து நீக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here